ADVERTISEMENT

மடிக்கணினி கொடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிரவைக்கும் போராட்டம்... திரளும் மாணவர்கள்!

05:50 PM Jul 26, 2019 | kalaimohan

2017 – 2018 கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 12 ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மடி கணினிகள் வழங்காத தமிழக அரசு அதன் பிறகு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு ஊரிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் மடிகணினி வழங்க உள்ளார் என்பதை அறிந்த முன்னாள் மாணவர்கள் முன்னதாகவே போராட்டங்களில் ஈடுபட்டனர். தகவலறிந்து அவர்களை அமைச்சர் செல்போனிலேயே சமாதானம் செய்தார். இருந்தும் அறந்தாங்கியில் ரெத்தினசபாபதி எம்.எல்.ஏவை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டனர். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் போராட்டமும் சமாதானமுமாக உள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மடிகணினி கிடைக்காத முன்னாள் மாணவர்கள் பேருந்து நிலையம் அருகில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கல்வித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் வரவில்லை. அங்கு வந்த காவல்துறையினர் மட்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி செல்போனில் வருவாய்துறை அதிகாரிகளிடம் மாணவர்களை பேசவைத்து விரைவில் மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக சொன்னதால் மறியல் கைவிடப்பட்டது.


ஆனாலும் இப்படியே தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யாருக்கும் மடிக்கணினி கிடைக்கவில்லை. அதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆலங்குடி தொகுதி முழுவதும் உள்ள 2017- 2018 கல்வியாண்டு மடிக்கணினி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் இணைந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர். இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை மாணவர்களும் ஒரே இடத்தில் இவ்வளவு மாணவர்கள் கூடினால் அடுத்தடுத்த தொகுதிகளில் மாவட்டங்களில் மாணவர்கள் கூடுவார்களே எப்படி சமாளிப்பது என்பது பற்றி அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் நடப்பதாகவும் கூறுகின்றனர்.

அதனால் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே மடிகணினிகள் கொடுக்க தொடங்கினால் மட்டுமே போராட்டங்களை தடுக்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT