ADVERTISEMENT

தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்த மகன் கொலை வழக்கில் கைது!

03:39 PM Jun 01, 2020 | rajavel

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த விசூர் கிராமம் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன். இவருக்கு சரளா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். வறுமையான குடும்பம். ஆனால் சௌந்தரபாண்டியன் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

ADVERTISEMENT


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று குடித்து விட்டு வந்து மனைவி, மகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் அவர் மனைவி சரளா கணவர் மீது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மந்தார குப்பத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். சில மாதங்கள் அங்கே தங்கியிருந்த சரளாவை சௌந்தரபாண்டியன் நேரில் சென்று சமாதானம் செய்துள்ளார். சரளாவின் பெற்றோரும், மருமகன் சௌந்தரபாண்டியனுக்கு அறிவுரை கூறி சரளாவையும் அவரது மகளையும் உடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது அவர்களது மகன் சௌந்தரபாண்டியன் மட்டும் பாட்டி வீட்டிலேயே தங்கிக்கொண்டு கல்லூரி சென்று படித்து வந்துள்ளார். சரளா தன் மகள் கணவரோடு மீண்டும் விசூர் கிராமத்திற்கு வந்து குடும்பமும் நடத்தி வந்தனர். கொஞ்சநாள் மதுபோதை போடாமல் இருந்த சௌந்தரபாண்டியன், மீண்டும் குடிக்க ஆரம்பித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சௌந்தரபாண்டியன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி சரளா, இப்படிக் குடித்துவிட்டு வந்து தகராறு செய்யலாமா? நம் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள், அவர்கள் மனநிலை என்ன மாதிரி இருக்கும் என்று கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சௌந்தரபாண்டியன் அருகில் இருந்த கழியை எடுத்து மனைவியையும் மகளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரளாவும் அவரது மகளும் மீண்டும் மந்தார குப்பத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஏற்கனவே பாட்டி வீட்டில் தங்கியிருந்த சரளாவின் மகன் அலெக்ஸ் பாண்டியனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. அவர் உடனடியாக மந்தார குப்பத்தில் இருந்து தனது தகப்பனார் தங்கியுள்ள விசூர்கிராமத்திற்குச் சென்றுள்ளார்.


தனது தந்தையான சௌந்தரபாண்டியனிடம் சென்ற அலெக்ஸ் பாண்டியன், ''ஏன் அம்மாவையும் அக்காவையும் அடிக்கிறாய்? நம் குடும்பம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது இப்படிக் குடித்துவிட்டு வந்து தகராறு செய்யலாமா? என்று கண்டித்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டியன், மகன் அலெக்ஸ் பாண்டியனை தாக்கியுள்ளார். கடும் கோபமுற்று அலெக்ஸ்பாண்டியன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தந்தை சௌந்தரபாண்டியன் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார் சௌந்தரபாண்டியன். அவர் போதை மயக்கத்தில் கிடப்பதாகக் கருதி அலெக்ஸ் பாண்டியன் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.

நேரம் ஆக ஆக சௌந்தரபாண்டியன் எழுந்திருக்கவில்லை. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சௌந்தரபாண்டியனை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் இறந்து போயிருந்தது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல் கேள்விப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் தலைமறைவானார். முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் மலர்விழி சக போலீசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்த சௌந்தரபாண்டியனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தார். இதுகுறித்து சரளா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மகன் அலெக்ஸ்பாண்டியனை பல்வேறு இடங்களில் தேடி நேற்று மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் போலீசாரிடம் கூறும்போது, நான் தனியார் கல்லூரியில் பட்டம் படித்து வருகிறேன். விசூர் கிராமத்தில் கரோனா பாதிப்பு உள்ளதால் மந்தார குப்பத்தில் உள்ள என் பாட்டி வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வருகிறேன். நேற்று முன்தினம் என் தந்தை, என் தங்கையையும் தாயையும் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்கள். எங்கள் குடும்பம் பசியும் பட்டினியுமாக வறுமையில் உள்ளது.


இந்தநிலையில் எனது தந்தை தினசரி குடித்து விட்டு வந்து அம்மாவையும் தங்கையையும் அடித்துத் துன்புறுத்தி வருவது வேதனை அளித்தது. அதன் காரணமாக ஊருக்குச் சென்று எனது அப்பாவின் செயலைக் கண்டித்தேன். அவர் மகன் என்றும் பாராமல் என்னையே தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் இருந்து கட்டையால் தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்து விட்டார் என நினைத்து எனது பாட்டி வீடான மந்தாரக்குப்பத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது போலீசார் வந்து என்னைக் கைது செய்தனர் என்று கூறியுள்ளார்.

அலெக்ஸ் பாண்டியன் படித்துப் பட்டம் பெற்ற ஒரு ஏழைக் குடும்பத்தின் பட்டதாரி. இளைஞனைக் கொலைகாரன் ஆக்கியுள்ளது இந்த மது. அரசாங்கம் இப்படி மது விற்பனை செய்து பல்வேறு குடும்பங்கள் சீரழிவதும் இல்லாமல், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களைக் கொலைகாரர்களாக மாற்றி வருகிறது. இதுபோன்ற குடும்பங்களில் குடிக்கும் அப்பா, மகன், தம்பி உட்பட உறவினர்களைக் குடிக்கக்கூடாது எனத் தட்டிக் கேட்கும் பிள்ளைகள் ஆத்திரத்தில் தாக்கும்போது மதுபோதையில் உள்ளவர்கள் இறந்து போகிறார்கள்.

இது திட்டமிட்டு தாக்கும் செயல் இல்லை என்றாலும் சந்தர்ப்பவசத்தில் பலர் சிக்கி கொலைகாரர்களாக ஆக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார்கள். இதனால் பல்வேறு குடும்பங்கள் குடும்பத் தலைவனை இழந்துள்ளனர். பிள்ளைகளைப் பிரிந்து, தாயைப் பிரிந்து திசை தெரியாமல் சிறையிலும் தனிமையிலும் வாழ்ந்து வருகிறார்கள். மது போதையில் சிக்கி சீரழியும் குடும்பங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்வது வேதனையளிக்கிறது என்றார்கள் மது எதிர்ப்பு போராளிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT