ADVERTISEMENT

“இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்ட விவசாயிகள் பயனடைய தொடங்கியுள்ளனர்” - இ. பெரியசாமி!

11:14 AM Dec 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் 58 கால்வாயினை சிமெண்ட் கால்வாயாக மாற்றும் திட்டம் குறித்த ஆய்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மேற்கொண்டார். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் விதமாக கலைஞர் அரசால் கொண்டுவரப்பட்ட 58 கால்வாய் திட்டத்தின் மூலம் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியப் பகுதியிலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தற்போது தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 58 கால்வாயினை தற்போது சிமெண்ட் கால்வாயாக மாற்றும் திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னெடுத்து தீவிரப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் உள்ள 58ஆம் கால்வாயினைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி பேசும்போது, “கலைஞரின் பொற்கால ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது மூன்று மாவட்ட விவசாயிகள் பயனடைய தொடங்கியுள்ளனர். இப்போது உள்ள கால்வாயில் பல இடங்களில் தண்ணீர் கசிவு இருப்பதால் அதனை சீர்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் அவர்கள் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் அறிவித்தது போல் 58ஆம் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளார்.

அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்னும் சில தினங்களில் உசிலம்பட்டி பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். மேலும், விராலிமாயன்பட்டி, ஆலங்குளம் கண்மாய், வத்தல்பட்டி, சேரன்குளம் கண்மாய்க்கு நேரடி நீர்ப்பாசனம் வருவதற்கான புதிய நீர்வழிப் பாதை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த ஆய்வின்போது வத்தலக்குண்டு ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT