ADVERTISEMENT

அர்ச்சகர் இல்லாத பிரசித்தி பெற்ற ஆலயம்... தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் பக்தர்கள்!

01:04 PM Sep 27, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது திருவட்டத்துறை கிராமம். வெள்ளாற்றின் கரையில் அழகாக அமைந்துள்ள இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு அரத்துறைநாதர், தீர்த்தபுரீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. இங்குள்ள அம்மன் திரிபுரசுந்தரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. இவ்வாலய இறைவனும், அம்பாளும் சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற ஆலயம். அப்படி பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். இந்த ஆலய இறைவனைப் பற்றி பாடுவதற்காக இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை, முத்துபல்லக்கு, முத்துக்குடை வழங்கி வரவேற்ற அதிசயம் நிறைந்த ஊர்.

திருவரத்துறை எனும் திருவட்டத்துறை சீர்காழியைச் சேர்ந்த சிறுவன் திருஞானசம்பந்தர் அங்குள்ள சிவன் ஆலயத்தின் குளக்கரையில் பசியால் அழுதுகொண்டிருந்தபோது பார்வதி தேவியால் ஞானப்பால் கொடுத்து அன்னையின் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர், அந்த சிறு வயதிலேயே ஊர் ஊராகச் சென்று சிவாலயங்களில் உள்ள இறைவனையும் அம்பாளையும் பற்றி பாட ஆரம்பித்தார். அப்படி பாடிக்கொண்டு வரும்போது திருவட்டத்துறை இறைவனைப் பற்றியும் பாடுவதற்காக வந்துகொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் மக்கள் நடைப்பயணம் மூலம்தான் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். அதைப்போல சிறுவன் திருஞானசம்பந்தரால் நீண்ட தூரம் நடக்க முடியாதபோது அவரது தந்தை அவரை தோளில் சுமந்து வந்தார். அப்படி திருவட்டத்துறை நோக்கி வரும்போது இறையூர் என்ற ஊர் வந்ததும் இருட்டிவிட்டது. இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடுவது என முடிவு செய்து தந்தையும் மகனும் மற்றும் அவர்களுடன் வந்த சிவனடியார்களும் இறையூரில் இரவு பொழுதை கழித்தனர்.

அதே இரவு திருவட்டத்துறை ஊரில் உள்ள அரத்துறைநாதர் ஆலய தர்மகர்த்தாக்கள் சிலர் கனவில் தோன்றிய இறைவன், “சீர்காழியிலிருந்து சிறுவன் திருஞானசம்பந்தன், அவனது தந்தை தோளில் சுமந்தபடி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் என்னைப் பற்றி பாட வந்துகொண்டிருக்கிறான். அவர்கள் தற்போது இறையூரில் தங்கியுள்ளனர். நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அங்கே முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவை தயாராக உள்ளன. அவைகளை எடுத்துச் சென்று உறையூரில் உள்ள திருஞானசம்பந்தரை அதில் அமரவைத்து இங்கு அழைத்துவந்து எம்மைப் பற்றி பாடச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு இறைவன் மறைந்தார். காலையில் எழுந்த தர்மகர்த்தா ஒருவர் மற்றொரு தர்மகர்த்தாவிடம் சென்று இரவில் தமது கனவில் தோன்றிய இறைவன் கூறிய விஷயத்தைப் பற்றி சொல்லியுள்ளார். அதைக் கேட்ட அந்த தர்மகர்த்தா, தானும் அதே போன்று கனவு கண்டதாக கூறியுள்ளார். இவர்களைப் போலவே மற்ற அனைத்து தர்மகர்த்தாக்கள் கனவிலும் இறைவன் தோன்றி கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அனைவரும் விரைந்து சென்று கோயில் கதவை திறந்தனர். என்னே அதிசயம், இறைவன் கனவில் கூறியது போலவே முத்துச் சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை அனைத்தும் தயாராக இருந்தன. தர்மகர்த்தாக்களும் ஊர் மக்களும் இறைவனின் மகிமையைக் கண்டு மெய் சிலிர்த்தனர். தெண்டனிட்டு இறைவனை வணங்கிவிட்டு இறைவன் கூறியபடி முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவற்றை சுமந்துகொண்டு திருஞானசம்பந்தரை அழைத்துவர இறையூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்படி செல்லும் வழியில் எதிரில் தனது தந்தையுடனும் சிவனடியார்களுடனும் திருஞானசம்பந்தர் எதிரே வந்துகொண்டிருந்தார். இப்படி இருதரப்பினரும் கூடிய இடம் தற்போது கூடலூர் என்ற ஊராக அமைந்துள்ளது. தர்மகர்த்தாக்கள் இறைவன் அளித்த முத்துச்சிவிகை, முத்துப் பல்லக்கில் திருஞானசம்பந்தரை அமரவைத்து முத்துக் குடை பிடித்தபடி திருவட்டத்துறை ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த திருஞானசம்பந்தர் இறைவன் தனக்கு அளித்த வெகுமதியை கண்டு மனம் உருகி இறைவனையும், அம்பாளையும் பற்றி பாடினார்.

இப்படி திருஞானசம்பந்தருக்கு வெகுமதி அளித்து அதிசயம் நிகழ்த்திக் காட்டிய இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய தற்போது அர்ச்சகர்கள் இல்லை. ஏற்கனவே இங்கு அர்ச்சகராக பணி செய்துவந்தவர் சாமிநாத குருக்கள். இவர் நீண்டகாலம் இவ்வாலய இறைவனுக்கும், அம்பாளுக்கும் இறை பக்தியுடன் பணி செய்துவந்தார். வயது மூப்பின் காரணமாக ஓராண்டுக்கு முன்பு அவர் இயற்கை எய்தினார். அதன்பிறகு இவ்வாலயத்திற்கு நிரந்தரமான அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத்திற்கு அதன் அதிகாரிகள் நிரந்தரமான அர்ச்சகர் ஒருவரை நியமிக்காமல் அலட்சியமாக உள்ளனர். தினசரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனையும் அம்பாளையும் வழிபட வரும் பக்தர்கள் பூஜை செய்ய அபிஷேகம் செய்ய அர்ச்சகர் இல்லாமல் தவிக்கிறார்கள், அல்லாடுகிறார்கள். எனவே நிரந்தரமான ஒரு அர்ச்சகரை பணியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களும், ஊர் மக்களும் கடந்த ஓராண்டாக வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT