ADVERTISEMENT

பிரபல ஓவியர் மாருதி காலமானார்

04:50 PM Jul 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பதே ஓவியர் மாருதியின் இயற்பெயர். மாருதி என்ற தலைப்பில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஓவியர் மாருதிக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.

ஆரம்பக் காலங்களில் ரங்கநாதன் என்ற பெயரில் திரைப்படங்களுக்குப் பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது 'மாருதி' எனக் கையொப்பம் இட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டது என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஓவியர் மாருதி ஓவியம் மட்டுமல்லாது உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கும், வீர மங்கை வேலு நாச்சியார் என்ற ஓரங்க நாடகத்திற்கும் ஆடை வடிவமைப்பிலும் ஈடுபட்டார். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது தந்துள்ளது‌. தற்பொழுது 82 வயதாகும் நிலையில் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஓவியர் மாருதி, உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் இன்று காலமானார். இந்தத் தகவல் ஓவியர்கள் மற்றும் பத்திரிகை வாசகர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT