ADVERTISEMENT

புகழ்பெற்ற குலசேரகப்பட்டினம் தசரா திருவிழா... கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

09:58 PM Oct 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மைசூரில் நடக்கும் ஸ்ரீ துர்கா பூஜை எனப்படுகிற தசரா திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. அதைப் போன்றே தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவும் தென் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரி எனப்படுகிறது 9 நாட்களும் விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். கடைசி 10ம் நாள் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாராம் வதம் நடைபெறும் சமயம் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளுவது வழக்கம். குறிப்பாகத் தென் மாவட்டத்தில் மிக முக்கியமான விழாவாகக் கருதப்படுகிறது குலசையின் முத்தாரம்மன் தசரா திருவிழா.

இந்த தசரா விழாவின் சிறப்பு அம்சமே முத்தாரம்மனிடம் நேர்ச்சையாகப் பக்தர்கள் வேண்டிக் கொண்டு கடலில் நீராடி காப்புகட்டிக் கொண்டு பக்தர்கள் அம்மனுக்குப்பிடித்த அவதார வேஷமெடுப்பதே. இதற்காக தென் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் தசரா குழுக்கள் என்று நூற்றுக்கணக்கான குழுக்களாகச் செயல்படுவார்கள். கொடியேற்ற தினம் முதல் தசரா விழா நாள் வரை பக்தர்கள் காளி, துர்கை, மகாலட்சுமி, பத்ரகாளி, போலீஸ் அவதாரம் என்று தங்களின் நேர்ச்சைக்கேற்ப வேடமணிந்து தசரா தினத்தில் மேள தாளங்களுடன் குலசேகரப்பட்டினம் வருவர்.

அன்றைய தினம் முத்தாரம்மன் ஆலய நகரம் இரவு பகல் திருவிழாவாக அமர்க்களப்படும் . குலசேகரப் பட்டினம் கடற்கரையில் நீராடி தங்களின் விரதத்தை முடிப்பவர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்திவிட்டு அம்மனை தரிசிப்பார்கள். காலம் காலமாக புரட்டாசித் திங்களில் நடைபெற்ற குலசேகரப்பட்டினம் தசரா கடந்தாண்டு கரோனா தொற்று தடை காரணமாகப் பக்தர்களின் வருகைக்கும் ஆலயப்பிரவேசத்திற்கும் தடைவிதிக்கப்பட்டதால் தசரா பக்தர்களின் கூட்டமின்றி ஆலயத்தின் வளாகத்திலேயே அம்மனுக்கு கொடியேற்றி, பத்து நாட்களும் வழக்கம் போன்று பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த வருடம் கரோனா இரண்டாம் கட்டப் பரவலைத் தொடர்ந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆலயத்தில் பக்தர்களின் வழிபாடு மற்றும் கூட்டம் கூடுவதற்கு அரசு தடைவிதித்தது. தற்போதைய நவராத்திரி திருவிழா காரணமாக கடந்த 6ம் தேதியன்று முத்தாரம்மன் கோவில் தசராவை முன்னிட்டு குலசேகரப்பட்டினம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தடைகாரணமாகப் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை.

கொடியேற்ற தினமான 6ம் தேதி காலை 9.41 மணிக்கு ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கொடிப் பட்டத்திற்கு பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்பட்டன. பலவகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணியளவில் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதி உலா நடந்தது. தடை ஒருபுறமிருந்தாலும் திருவிழா நாட்களில் 9 நாளும் காலை இரவு என தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் வழக்கம் போன்று நடைபெறும் கடைசி தினமான அக். 15ம் நாள் இரவு 12 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகிஷா சூரசம்ஹார வதம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. 11ம் நாள் அம்மன் கலையரங்கத்திற்கு எழுந்தருளுதலும் 12ம் திருநாளன்று நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் முத்தாரம்மனின் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா நாட்களில் ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பூ, மாலை, தேங்காய், பழம் கொண்டு வர அனுமதி இல்லை. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தசரா நிகழ்ச்சிகள் யூ டியூப் சேனல் இணையதளம் மூலம் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டும் கரோனா பரவல் தடை காரணமாக திரண்ட பக்தர்கள் உடன்குடிச்சாலையிலுள்ள ஒரு கோவிலில் மாலை அணிந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT