ADVERTISEMENT

திருடர்களைக் கண்டுபிடிக்காததால் குடும்பத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டம்!

12:24 PM Jul 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் சின்னத்துரை, கடந்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனலட்சுமி தனது மகள் ஜெயலஷ்மி மற்றும் மகன் விக்னேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகள் ஜெயலட்சுமியின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 110 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரொக்க பணத்தை கடந்த மார்ச் 10-ஆம் தேதி பட்டப்பகலில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த நான்கு மாத காலமாக திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


இதனால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி, தனது மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்து வைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் மனமுடைந்த அக்குடும்பத்தினர், புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் காவல்துறையினரை கண்டித்து, கையில் பதாகைகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து சென்ற விருத்தாசலம் காவல்துறையினர், திருடிய நகையை மீட்டுத் தருவோம் என சமரசம் பேசினர். ஆனால், அக்குடும்பத்தினர் கடந்த நான்கு மாதங்களாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், அலட்சியம் காட்டுவதால் எனது மகளின் திருமண வாழ்க்கை முற்றிலுமாக கேள்விக்குறியாகிவிட்டது. சிறுக சிறுக விவசாய வேலைகளை செய்து சேர்த்து வைத்த அனைத்தும், காணாமல் போனதை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என அழுதபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தருகிறோம் என காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT