ADVERTISEMENT

“எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு...” - ராஜேந்திர பாலாஜி ரண்டக்க ரண்டக்க

08:16 PM Oct 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்கு திமுக, பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ‘ரியாக்ட்’ செய்துள்ளன. “ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய ஜோக்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து சொல்லாமல் சிரித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தை சுவாரஸ்யமாக்கி உள்ளது.

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அப்படி என்னதான் பேசினார் ராஜேந்திர பாலாஜி?

“அதிமுகவுக்கு வயசு 52. இது ஒரு பக்குவப்பட்ட வயது. எதையும் சிந்தித்துச் செயல்படக்கூடிய வயது. 20 வயதென்றால் பயமறியாமல் ஏதாவது செய்து எதிலாவது சிக்கிவிடுவார்கள். 70 வயதில் தடுமாற்றம் வந்துவிடும். பக்குவப்பட்ட 52 வயது என்பதால், எதையும் தீர யோசித்து கம்பீரமாகச் செயல்படுகிறது அதிமுக. அதனால், எதையும் நிதானித்து செயல்படக்கூடிய, பக்குவமானவராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக தலைமை, இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னது எல்லாம் பொய். ஏதாவது ஒரு பொய் சொல்லியிருந்தால் ஒன்றிரண்டு பொய் சொல்லியிருக்கிறார் என்று சொல்லலாம். இவர் சொன்னது எல்லாமே பொய். எடப்பாடி பழனிசாமி சொன்னது எல்லாம் நிஜம். ரேஷன் கார்டு வைத்திருக்கும், அரிசி வாங்கக்கூடிய அத்தனை குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள்.

நீட் தேர்வு ரத்து என்றார்கள். சொன்னதற்கு மாறாக நடந்து கொண்டார்கள். இரண்டே முக்கால் ஆண்டு கழித்து நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். இதெல்லாம் ஏமாற்று வேலை. எல்லாம் நாடகம்; எல்லாம் நடிப்பு. எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்களித்து, அவர் சொல்லுகின்ற பிரதமர், ஏன் சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே பிரமராக வரக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான தீர்ப்பை 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினால், இந்தப் பகுதி மக்கள் வழங்கினால், எடப்பாடி பழனிசாமி கரம் ஓங்கினால், டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொல்வது நடக்கும். வெள்ளந்தித்தனமாக உண்மை மட்டுமே பேசக்கூடிய, வெகுளித்தனமாக பேசக்கூடிய உண்மை உழைப்பாளி, ஒரு விவசாயி, பச்சைத் தமிழன், புரட்சித் தமிழன் எடப்பாடி பழனிசாமி அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலே முதலமைச்சராக வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT