ADVERTISEMENT

ஊரடங்கு நிலையை மட்டும் நீட்டிப்பதால் நாடு அமைதி கொள்ளாது-சிபிஐ மாநில செயற்குழு அறிக்கை

11:13 PM May 02, 2020 | kalaimohan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு இன்று தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோளில்,

ADVERTISEMENT

"கோவிட் 19 வைரஸ் நோய் பெருந்தொற்று பரவுவதை தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மூன்றாவது முறையாக நாடு முழுவதும் முடக்கம் மே 17 வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் கோவிட் 19 பாதிப்பின் அளவையும், வீச்சையும் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் மாவட்டங்களை வகைப்படுத்தி உள்ளனர். மாவட்டத்திற்கு மாவட்டம் வெவ்வேறு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நோய் பெருந்தொற்று பரவல் அபாயத்தில் இருந்து முழுமையாக வெளி வரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து, வியாபாரத்தை தொடரலாம் எனக் கருதுவதாகவும், மதுபான கடைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுக்கலாம் என்பதை வாய்ப்பாக பயன்படுத்தி மதுக்கடைகளை திறக்க மாநில அமைச்சரவை முடிவு எடுக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.

கோவிட் 19 நோய் பெருந்தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வராமல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அவசரப்பட்டு திறப்பது, இதுவரை எடுத்து வந்து நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி, கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவலுக்கு ‘பச்சைக்‘ கொடி காட்டும் குற்றச் செயலாகிவிடும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசுக்கு சுட்டிக் காட்டி காட்டுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், நோய் பெருந்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் நாடு முடக்கம் நீடிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் கருதலாம். ஆனால் 40 நாள் நாடு முடக்கத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நிலை குலைந்து போயிருப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் உடல் உழைப்பு தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அமைப்பசாராத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினர் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் குறைந்த பட்ச நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்.

கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் எண்ணத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டு, உணவின்றி தவிப்போர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கோவிட் 19 நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என குறிப்பிடபட்டுள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில்,
"கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே 17 ஆம் தேதி வரை நீடிப்பது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 40.நாட்களாக ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தி படிப்படியாக இயல்பு நிலைக்கு செல்லும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. நகரப்புறங்களை சார்ந்தே தொழிற்சாலைகள் பெருமளவில் அமைந்துள்ள நிலையில் கிராமப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது வெறும் அறிவிப்பாகவே இருக்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் மாநில அரசு மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், அயல் நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்புவது குறித்து எந்த ஏற்பாடும் அறிவிக்கவில்லை.


கடந்த 40 நாள்களாக வேலை இல்லாமல் அரசு வழங்கிய நிவாரண பொருள்களையும், தன்னார்வலர்கள் கொடுத்து வரும் உதவியிலும் அரைகுறை உயிர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தப் பெரும் பகுதி குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்திய கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை.

கரோனா நோய் பெருந்தொற்று குறித்து பரிசோதனை செய்வதை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய ரூபாய் 6 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவிட் 19 நோய் தொற்று தடுப்பு என்கிற பெயரில் ஜனநாயக நடைமுறைகள் கைவிடப்படுகின்றன. பாதிக்கப்படும் மக்கள் கண்ணீர் துடைக்காமல், அஇஅதிமுக அரசு நடவடிக்கைகள் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது.

இதே நிலை நீடிக்கும் எனில் நாடு அமைதி கொள்ளாது என்பதை சுட்டிக் காட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஇஅதிமுக அரசை எச்சரிக்கை செய்கிறது." என அரசுக்கு அறிவிப்பு செய்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT