ADVERTISEMENT

விலை எகிறிய முருங்கை காய்...!  கிலோ ரூ. 300க்கு விற்பனை! 

06:00 PM Dec 14, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுக்க வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் அதன் இயல்பைவிட கூடுதலாக பெய்தது. அதே போல் ஈரோடு மாவட்டத்திலும் சென்ற சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்தது. இதன் எதிரொலியாக ஈரோடு மார்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து என்பது வெகுவாக குறைந்தது. இதனால் பல வகை காய்கறிகளின் விலையும் வேகமாக உயர்ந்தது. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் பெரிய மார்க்கெட்டில் மழை காரணமாக பல்வேறு காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விற்பனைக்கு வருவது குறைந்தது. மேலும் இப்போது கார்த்திகை மாதம் என்பதால் பலரும் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் அசைவத்திற்கு பதிலாக சைவ உணவு உட்கொள்வோர் அதிகரித்துள்ளனர்.

எனவே காய்கறிகளின் தேவை என்பது அதிகரித்துள்ளது. எனினும் தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் அதன் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சில நாட்களாக முருங்கைக்காய் விலை தொடர் வேகத்தில் எகிறியிருக்கிறது. இந்த மார்கெட்டுக்கு தினமும் 100 மூட்டை முருங்கைக்காய் வழக்கமாக வரும். ஆனால் தற்போது வெறும் 10 மூட்டைகள் மட்டுமே வருகிறது. இதனால் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு அதிரடியாக உயர்ந்து 14ந் தேதியன்று ஒரு கிலோ ரூபாய் 300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து முருங்கைக்காய் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் 14 ந் தேதி விலை ஒரு கிலோ அளவுப்படி, கத்திரிக்காய் ரூபாய் 120, கருப்பு அவரை ரூ. 120, பட்டா அவரை 100 ரூபாய், பீட்ரூட் 60, ரூபாய், கேரட் ரூபாய் 70, பீன்ஸ் ரூ 80, பச்சை மிளகாய் ரூ. 70, முட்டைக்கோஸ் ரூபாய் ரூ. 60, இஞ்சி ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ. 40, முள்ளங்கி ரூ. 50, பீர்க்கங்காய் ரூ. 70, பாவைக்காய் ரூ. 60, சின்ன வெங்காயம் ரூ. 50 முதல் 60 வரை பெரிய வெங்காயம் ரூ. 40லிருந்து ரூ. 50 என விற்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் கூலி வேலை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினரை மிகவும் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT