ADVERTISEMENT

அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை குறித்து விமர்சிக்க நீதிபதி என்ன தலைமைக் கழக உறுப்பினரா? முன்னாள் அ.தி.மு.க எம்பி ஆவேசம்

03:10 PM Aug 24, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான, எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகிறார். இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்.பி இரத்தினவேல், முன்னாள் எம்.பி, ப. குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் எம்பி ப.குமார், "வரும் மூன்றரை ஆண்டு காலத்தில் அதிமுக அரியணை ஏறுவதற்கு இது விதை விதைக்கின்ற காலம். நாம் அனைவரும் சேர்ந்து விதைத்தால் தான் வெற்றிகரமாக அறுவடை செய்ய முடியும். எனவே எந்த ஒரு தொண்டனையும் அ.தி.மு.க இழக்கக்கூடாது என்ற நோக்கில்தான் ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவை எடப்பாடி பழனிச்சாமி வழி நடத்துகிறார்.

எத்தனை இடர்கள் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி திறமையாக செயல்படுகிறார். இதனை தொண்டர்கள் உணர்ந்துள்ளார்கள். ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும் என்றால் இயக்கத்தின் வளர்ச்சி, தொண்டர்களின் நலன் இதனை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இதனையே தாரக மந்திரமாக கொண்டு மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அதிமுகவை வழி நடத்தினார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுமார் நான்கரை ஆண்டு காலம் இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்தது. இரட்டை தலைமை உருவாகியது. அ.தி.மு.கவை விட்டுப் பிரிந்த ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவிற்கு துரோகம் செய்து திமுகவுடன் எவ்வாறு இணக்கமாக செயல்பட்டார் என்பதை தொண்டர்கள் நன்கு அறிவீர்கள்.இன்று அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்கு ஓபிஎஸ் தான் முக்கிய காரணம். அதிமுக வெற்றியை தடுத்து எடப்பாடி முதல்வராக வர முட்டுக்கட்டை போட்டவர்கள் ஓ.பி.எஸும், அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கமும் தான். ஓபிஎஸ் பக்கம் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் தனக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார்.

இது எந்த விதத்தில் நியாயம்? பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வரவேண்டும் என ஒட்டுமொத்த தொண்டர்களும் விரும்புகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள், நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இரண்டாவதாக வழங்கப்பட்ட தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி மனசாட்சியுடன் விசாரித்து இருந்தால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் வந்திருக்க வேண்டும். அதிமுக தொண்டர்களால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர நீதிமன்றங்களால் அல்ல. நீதிமன்றங்கள் வழி நடத்தினால் தொண்டர்கள் எதற்கு? நான்கரை ஆண்டு காலம் அரசையும் இயக்கத்தையும் ஒன்றாகத்தானே கொண்டு சென்றீர்கள்? தற்போது எதற்கு ஒற்றை தலைமை? என நீதிபதி கேள்வி எழுப்புகிறார்.

நீதிபதி ஏன் இந்த கேள்வியை எழுப்பி தீர்ப்பு வழங்குகிறார். நீதிபதியை தான் நாம் விமர்சிக்க கூடாது ஆனால் தீர்ப்பை விமர்சிக்கலாம். இதற்காக என் மீது வழக்கு பாயுமானால் அதை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன். அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விமர்சிக்க நீதிபதி என்ன தலைமைக் கழக உறுப்பினரா? கேள்வி எழுப்பிய முன்னாள் எம்பி ப.குமார், அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை உணர்ந்து செயலாற்றி வருகிறோம்.

துரோகிகள் வீழ்த்தப்படுவார்கள் எனவே தொண்டர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தனது சுயநலத்திற்காக நாளுக்கு நாள் இடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து விலகி வெகு தூரம் சென்று விட்டார்.எனவே ஓபிஎஸ் ஒருபோதும் திரும்பி வர மாட்டார் தொண்டர்களும் அவரை சேர்க்க மாட்டார்கள்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT