ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

07:08 AM Apr 16, 2024 | prabukumar@nak…

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திராகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார்.

ADVERTISEMENT

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திராகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT