ADVERTISEMENT

அடக்குமுறையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது எடப்பாடி அரசு !" - வேல்முருகன் அதிரடி

07:45 PM Jul 04, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வைத்திருந்ததாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த வாகனத்தையும்(வேன்) பறிமுதல் செய்துள்ளது காவல்துறை. இதனைக் கண்டித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், " எட்டுவழிச்சாலைக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 19 பேரை அராஜகமாக கைது செய்துள்ளது போலீஸ். இந்த சம்பவம், கொடுங்கோல் ஆட்சியை நிரூபிக்கிறது.

ADVERTISEMENT


உலகின் மிகக் கொடிய கொடுங்கோலர்களாக வரலாற்றில் இடம்பெற்றவர்கள் இத்தாலி நாட்டு முசோலினியும் ஜெர்மன் நாட்டு ஹிட்லரும் ஆவர். இவர்கள் கையாண்ட அடக்குமுறை வடிவங்கள்தான் ஃபாசிசம் மற்றும் நாஜிசம்!இவர்கள் இருவரையுமே தூக்கி சாப்பிட்டுவிட்டார் நரேந்திர தாமோதர தாஸ் மோடி! அவர்களின் ஃபாசிசத்தையும் நாசிசத்தையும் மிஞ்சிவிட்டது மோடியிசம்!

அடக்குமுறையின் பரிணாம வளர்ச்சிதான் இந்த மோடியிசம்! அதாவது, தம்மை எதிர்த்தவர்களையும் எதிர்த்துப் போரிட்டவர்களையுமே குறிவைத்தன ஃபாசிசமும் நாஜிசமும்! ஆனால் எந்தச் செயலிலும் ஈடுபடாதவர்களைக் கூட வேட்டையாடுகிறது மோடியிசம்!

மோடியிச அடக்குமுறை தர்பார் என்பது, வகுப்புவாத-மதவாத அடிப்படையில் பொறுக்கியெடுத்த உயரதிகாரிகளாகப் பார்த்து அனைத்து துறைகளிலும் புகுத்தி நடத்தப்படுகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து பக்கத்துச் சிறுமதிலூருக்குப் புறப்பட்ட வேனை அதில் சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிரான துண்டு பிரசுரம் வைத்திருந்ததாக மகரல் போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

வேன் ஓட்டுநர் உள்பட அதில் இருந்த 19 பேரையும் கைது செய்திருக்கின்றனர். பெண்களும் ஆண்களுமான இந்த 19 பேரும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் 1.ச.தீனன் என்ற தினேஷ்(37), 2. மகேஷ்(46), 3. ஜெசி குளோரி(46), 4. ரேச்சல் என்ற கனல்விழி(43), 5. யோகநாதன் என்ற காஞ்சி அமுதன்(52), 6. அர்விந்த்(27), 7.ஜெயராமன் என்ற உலக ஒளி(73), 8.சாந்தி(48), 9.ஆனந்தி(38), 10.முருகானந்தம்(41), 11.வெற்றித்தமிழன் என்ற விஜயகுமார்(35), 12.தாண்டவமூர்த்தி(48), 13.பழனி, 14.ரவி பாரதி(32), 15.செல்வராஜ், 16. சுப்பிரமணி (23),17. சந்திரன்(55), (46), 18. அல்லி(53) மற்றும் ஓட்டுநர் எழிலரசன்.

ஐபிசி 147, 188, 341, 283, 290, 294(பி), 505(1)(பி), 353, 506(1) பிரிவுகள் மற்றும் பொது இடத்தில் கூடி வன்முறையைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 7(1) - இன் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு செல்கையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே போலீசார் தாக்கவும் செய்திருக்கிறார்கள்.

சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிரான மக்கள் கருத்துக்களை அன்றாடம் ஊடகங்கள் வெளியிடுகின்றன; ஒளிபரப்புகின்றன. அத்தகைய கருத்துக்களுக்கு மேல் எந்தக் கருத்தும் துண்டு பிரசுரத்தில் இடம்பெறவில்லை; அந்தத் துண்டு பிரசுரத்தையும்கூட விநியோகிக்கவில்லை. ஆனால் வேனோடு சேர்த்து 19 பேரையும் கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு ரிமாண்ட் செய்திருக்கிறது ஃபாசிச பழனிசாமி அரசு. இதன் மூலம் ஃபாசிசத்தையும் நாஜிசத்தையும் மிஞ்சிய மோடியிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மிக மோசமான கொடுங்கோலராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி!

எந்தச் செயலிலும் ஈடுபடாத தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 19 பேரை பொய்வழக்கில் கைது செய்திருக்கும் பழனிசாமி அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், குற்றமற்ற அவர்களை விடுவிக்குமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி"என்கிறார் மிக ஆவேசமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT