ADVERTISEMENT

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள்!

12:40 PM Sep 21, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக தலைவர் ஸ்டாலின் காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

ADVERTISEMENT

“காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என்று, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை மின்துறை அமைச்சர் திரு தங்கமணி அவர்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, பேட்டி என்ற பெயரில் அளித்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஊழல் புகாரை வெளியிடும் போது ஆதாரங்களை மறைத்து பதில் கொடுப்பது அமைச்சருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன் என்பது கூடத்தெரியாமல் - அல்லது புரியாமல், அமைச்சர் காற்றாலை தொடர்பான இமாலய ஊழலை மறைக்க முயற்சிக்கிறார்.

ஆதாரம் -1

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், “உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் சொல்வது என்றால், “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அந்த ஆடிட் அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க வீணே முயற்சி செய்வதில்தான், ஊழலின் மொத்த உருவமுமே மறைந்திருக்கிறது. மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுங்கள் என்று ஆடிட் அதிகாரி கூறியிருப்பது ஏன்?

ஆதாரம் -2

அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வைப் பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது? அந்த மேற்பார்வைப் பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், 11 கோடி ரூபாய் பணம் செலுத்தக்கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன்?

ஆகவே, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு கணக்கு” காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன். ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாறேயானால், மின்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு” கணக்குக் காட்டி நடைபெற்றுள்ள ஊழல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடத் தயாரா?’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT