ADVERTISEMENT

“மக்கள் செல்ஃபோன் மூலம் புகார் அளித்தாலும் முறையாக விசாரிக்கப்படும்..” - புதிய காவல் கண்காணிப்பாளர் 

03:10 PM Jun 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீ அபிநவ், சேலம் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டதையடுத்து, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த சி. சக்திகணேசன் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சக்திகணேசன் நேற்று (14.06.2021) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கிய சக்தி கணேசன், பின்னர் காஞ்சிபுரம், அரக்கோணம், கமுதி உள்ளிட்ட இடங்களில் பணியைத் தொடர்ந்த நிலையில், திருச்சியில் பதவி உயர்வுபெற்று இணை ஆணையராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

நேற்று கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சி. சக்தி கணேசன், செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "கடலூர் மாவட்டத்தில், மாவட்டக் காவல்துறை பணியை மக்கள் பாராட்டும் விதத்தில் சிறப்புடன் அமைய அனைத்து விதத்திலும் எனது செயல்பாடுகள் அமையும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டத்தில் பிரதான சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் கூடுதலாக அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது மாவட்டத்தில் 4,500 சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப்படும் நிலையில், தொடர்ந்து அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதியோர், பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி முன்னுரிமை அளித்து நேரடி விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் இருந்து நேரடியாக புகார்களைப் பெறுவதற்கு 'ஹலோ சீனியர்ஸ் ஃபர்ஸ்ட்' என்று முதியோர்களுக்கும், 'லேடிஸ் ஃபர்ஸ்ட்' என்று பெண்களுக்கும் புதிய திட்டத்தின் கீழ் செல்ஃபோன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தங்கள் புகார்களை அளிக்கலாம். அவர்கள் புகார் கொடுத்தவுடன் நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறை செயல்படும். புகாரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தனியாக காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் விசாரணைக் குழு செயல்படும். மேலும், பொதுமக்களும் தங்களின் புகார்கள் குறித்து புகார் அளிக்க முடியாத சூழ்நிலையில் இதுபோன்று செல்ஃபோன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அத்தகைய புகார்களின் அடிப்படையில் அருகிலுள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிக்கையில், "பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் பெண்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் 9698111190 என்ற செல்ஃபோன் எண்ணில் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தங்கள் புகார்களை அளிக்கலாம். அதுபோல் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, மது கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் இதே எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT