ADVERTISEMENT

இ.எஸ்.ஐ. சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்... மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு!

09:45 PM Jul 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT



தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் (இ.எஸ்.ஐ) பொருந்தும் என, சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் எனக் கூறி, தமிழக அரசு கடந்த 2010- ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்று கல்வி நிறுவனங்களின் சார்பில் தனித்தனியாக பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே இந்த விவகாரம் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தற்போது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த, சென்னை உயர்நீதிமன்ற வேறு இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இ.எஸ்.ஐ. சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா? என்பன உள்ளிட்ட சட்ட கேள்விகளுக்குப் பதில் காணும் வகையில், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார்.

இதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி. ஆஷா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா? இல்லையா? என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா? இல்லையா? என்பது மட்டுமல்லாமல், பல சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதனையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகு, வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி. ஆஷா அடங்கிய அமர்வு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும். இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணை செல்லும். மேலும், தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனியப்பன் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT