ADVERTISEMENT

வணிகர் உரிமை மாநாடு; அமைச்சர்கள் பங்கேற்பு

06:20 PM May 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் 40வது வணிகர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று (05.05.2023) தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார். மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வணிகக் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. 40வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. தேசியத் தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கோவை மண்டல தலைவர் சூலூர் டி. ஆர். சந்திரசேகரன் ஆகியோர் வணிகக் கொடியை ஏற்றி வைத்தனர். அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசியத் தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கலக்கப்போவது யாரு குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத் தொடர்ந்து டெக்ஸ்வேலி தலைவர் பெரியசாமி, எஸ்கேஎம் அனிமல் பீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகர், தொழில் அதிபர் செந்தில் முருகன், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அமைச்சர்களை விக்கிரமராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு வ.உ.சி. விருதையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வணிகச் செம்மல் விருதையும், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, க.மோகன் நினைவாக கல்வி ஊக்கத்தொகையும் வழங்கி பேசினர்.

இதில் வ.உ.சி. விருதை நாமக்கல் என்.வெள்ளையன், ஆர்.எம்.தேவராஜா, ஆர்.பரமேஸ்வரன், கே.ராஜகோபால் ஆகியோரும், வணிகச் செம்மல் விருதை ஏ.ஹரிகிருஷ்ணன், ஆர்.எஸ்.கணேசன், ஏ.துரைசாமி ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். மேலும் 39வது வணிகர் தின மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டுத் தொடரில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை நேற்று மாலை திறந்து வைத்தார். தமிழக அனைத்து சிறு,குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 115க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன. அந்த ஸ்டால்களை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT