ADVERTISEMENT

நள்ளிரவில் சினிமா பாணியில் பிரபல கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்தது போலீல்

10:20 PM Nov 23, 2018 | jeevathangavel


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு காரில் 80 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் மணிகண்டன் என்பவனை பெருந்துறை போலீசார் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். அவனது காரில் இருந்த வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், காட்பாடி, கே.வி குப்பம் பகுதியை சார்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (41). இவன் மீது வேலூர், வாலாஜாபாத், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாமக்கல், தர்மபுரி, கோவை வடவள்ளி, துடியலூர், காட்டூர், பொள்ளாச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 குண்டாஸ் உட்பட 80 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இவனை பிடித்த காஞ்சிபுரம் போலீசார் இவனிடமிருந்து ஒரு கிலோ நகை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.

ADVERTISEMENT

கடந்த நவ.3 ம் தேதி வெளியே வந்த மணிகண்டன் அதன் பிறகு ஆறு இடங்களில் இரண்டு கிலோவிற்கு மேல் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளான். இவனை பிடிக்க போத்தனூர் குற்ற பிரிவு உதவி ஆணையர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில் இவனது கூட்டாளி ஒருவனை நகை விற்க கொண்டு செல்லும்போது தனிப்படை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவன் கைதான தகவல் தெரியாமல் அவனது செல்போனுக்கு மணிகண்டன் தொடர்புகொண்டதால் மணிகண்டனின் மொபைல் எண்ணை வைத்து தேடி வந்தனர். நேற்று முன் தினம் திண்டுக்கல்லில் ஒரு வீட்டில் திருடிவிட்டு அப்படியே ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டான். பின் நேற்று அங்கிருந்து கேரளாவிற்கு சென்றான். பிறகு அங்கிருந்து சேலம் செல்ல கோவை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளான்.

நேற்று நள்ளிரவு இத்தகவல் பெருந்துறை போலீசாருக்கு கிடைத்ததால் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தனர். இரவு சுமார் 1;30 மணியளவில் பெருந்துறை சிப்காட் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் நிரப்பியபோது சினிமா பாணியில் போலீசார் சுற்றி வளைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார் முன்னிலையில் கார் சோதனையிடப்பட்டது.

காரின் டிக்கியில் வீட்டின் பூட்டை உடைக்க 10 க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகள், 8 செல்போன், வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஏராளமாக இருந்தது கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். சேலத்தில் உள்ள வக்கீல் ஒருவரிடம் 10 லட்ச ரூபாய் கொடுத்து காரை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளை ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிப்பது தான் வாடிக்கை. இவனை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சோமசுந்தரத்திடம் காருடன் பெருந்துறை காவல்துறையினர் ஒப்படைத்தனர். இவனது கூட்டாளியிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் தற்போது பிடிபட்ட நகைகளை மதிப்பீடு செய்யும் பணி முடியாததால் மொத்த மதிப்பு குறித்து கோவை மன்டல ஐ. ஜி மூலம் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT