ADVERTISEMENT

தனிமனித சுதந்திரம் பாதிக்காதவாறு வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்பை அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

10:44 AM Apr 22, 2018 | rajavel


தனிமனித சுதந்திரம் பாதிக்காதவாறு வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அந்த சட்டத்தை செயல்படுத்துவதில் மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடுகின்ற அரசியல் கட்சிகளும், அமைதி காக்கின்ற அரசியல் கட்சிகளும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் ஓட்டுகளை குறிவைத்தே செயல்படுகிறார்கள். ஆனால் விசாரிக்காமல் கைது செய்யலாம் என்று இருக்கின்ற உட்பிரிவு தான் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே பகையை ஏற்படுத்தி இணக்கமாக இருப்பதை தடுக்கிறது.


மொத்தத்தில் சமூகத்தில் அமைதி நிலவுவதை தடுப்பதே இந்த உட்பிரிவு தான். அதை முழுமையாக புரிந்து கொண்டு தான் உச்சநீதிமன்றம் சமூக நலன் கருதி இடையே 1989 –ல் புகுத்தப்பட்ட இந்த உட்பிரிவை நீக்கி இருக்கிறார்கள். ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேர் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவில் வழக்கு தொடுத்தது எல்லோரும் அறிந்ததே. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே இந்த சட்ட உட்பிரிவை பயன்படுத்தி பொய் வழக்கு போட்டு மிரட்டலாம் என்றால் இந்த நாட்டினுடைய சாதாரண குடிமக்களின் நிலை என்ன?.

அதேபோல் தமிழக சட்டமன்றத்திலே கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டமன்ற சபாநாயகர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் மீதும், திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் இந்த சட்டத்தில் வழக்கு தொடருவோம் என்று மிரட்டியதும் நடந்ததுதானே. எனவே மற்ற சமூகத்தின் தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT