ADVERTISEMENT

எம்.ஜி.ஆர்., ஜெ. நினைவிடத்தில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மரியாதை!

12:11 PM Oct 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க.வை வழி நடத்த திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை" அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதைத்தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ்.க்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்தும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஓ.பி.எஸ். முதல்வர் வேட்பாளராக ஈ.பி.எஸ். அறிவிக்கப்பட்டத்தை அடுத்து சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, மெரினாவில் செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சரும், கட்சியின் வழிகாட்டு குழுவின் உறுப்பினருமான ஜெயக்குமார் பதிலளித்தார்.

வழிகாட்டு குழுவில் ஓ.பி.எஸ். தரப்பு புறக்கணிப்பா?

"பாகுபாடின்றி ஒருமித்த கருத்துடன்தான் 11 பேர் கொண்ட அ.தி.மு.க. கட்சியின் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வைத்து குளிர்காயலாம் என்ற எதிர்க்கட்சிகளின் நினைப்பில் மண் விழுந்துள்ளது" என்றார்.

11 பேர் கொண்ட குழுவில் ஈ.பி.எஸ். தரப்பில் 6 பேரும், ஓ.பி.எஸ். தரப்பில் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT