ADVERTISEMENT

முறையற்ற தொடர்பால் எழுந்த விரோதம் - மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

10:11 PM Nov 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முறையற்ற தொடர்பை கண்டித்த மாமனார் நீதிமன்றம் சென்று திரும்பிய நேரத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விபரீதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவராசு (72) திமுக பிரமுகர். இவரது 2வது மகள் லதாவை அதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 1991 முதல் 2011 வரை ராணுவத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன் தற்போது கந்தர்வக்கோட்டை சிவன் கோவில் காவலாளியாக உள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு வேறு சில பெண்களுடன் முறையற்ற தொடர்பு இருப்பது தெரிந்து அவரது மனைவி லதா கேட்டதால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்துள்ளது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட லதா தனது குழந்தைகளுடன் தந்தை சைவராசு வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார். இதன்பிறகு தனது முறையற்ற தொடர்பை விடாத ரவிச்சந்திரன் தனது மனைவி பெயரில் உள்ள சொத்துகளை தன் பெயருக்கு எழுதிக் கேட்டு சைவராசு வீட்டிற்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

குடும்ப பிரச்சனை சம்பந்தமான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில். இன்று சைவராசு தனியாகவும் ரவிச்சந்திரன் தனியாகவும் நீதிமன்றம் சென்றனர். மாலை சைவராசு ஏறிய பேருந்தில் ரவிச்சந்திரனும் ஏறியுள்ளார். இதனால் ஆதனக்கோட்டையில் இறங்கிய சைவராசு அடுத்த பேருந்தில் ஏறி கந்தர்வக்கோட்டை வந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது ரவிச்சந்திரன் சைவராசு வீடு அருகே தனது இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் தயாராகக் காத்திருந்து அருகில் வரும்போது தலையில் சுட்டதில் மாமனார் சைவராசு தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சைவராசோடு வந்த மற்றொருவரையும் சுட முயன்றபோது அதனைத் தடுத்ததால் துப்பாக்கிக் கட்டையால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு சைவராசு குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் ஓடி வருவதற்குள் தப்பி ஓடிய முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் குவிந்த உறவினர்கள் ''அடிக்கடி துப்பாக்கியைக் காட்டி மிரட்டுறான். துப்பாக்கியைப் பறிமுதல் செய்யுங்கன்னு பல முறை போலீசாரிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஒரு உயிரை பறிச்சுட்டான்'' என்று கதறி அழுதனர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ரவிச்சந்திரன் தனது மாமனாரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்கு 2023 டிசம்பர் வரை லைசன்ஸ் உள்ளது.

நாட்டைக் காக்கப் பயிற்சி பெற்ற ராணுவ வீரர் முறையற்ற தொடர்புக்காகவும், சொத்திற்காகவும் தன் மாமனாரையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT