ADVERTISEMENT

'இரண்டு வயது வரை தாய்ப்பால் பெறும் குழந்தைகளின் வளர்ச்சி திறன் சிறப்பாக இருக்கும்'-அமைச்சர் சக்கரபாணி பேச்சு!

10:46 PM Aug 04, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது ''தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக உலகெங்கும் உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை சிறப்பாக அமைய, முதல் உன்னதமான ஊட்டச்சத்து தாய்ப்பால் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் (1ம் தேதி முதல் 7ம் தேதி வரை) உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி பெறுவதோடு, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச சம்பந்தமான நோய்களிலிருந்து பெருமளவு பாதுகாக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்திற்குள் மூளை 80 சதவீத வளர்ச்சி அடைகின்றது. இச்சமயத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமையும். இரண்டு வயது வரை தாய்ப்பால் பெறும் குழந்தைகளின் உணர்ச்சி திறன் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வார விழாவானது தாய்ப்பால் அளிப்பதை உயர்த்துவோம் - கற்பிப்போம், ஆதரிப்போம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது'' என்று கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா, திருவாரூர் நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், புள்ளியியல் ஆய்வாளர் சந்திரநிபா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT