ADVERTISEMENT

மளிகைக் கடையின் கதவை உடைத்து தக்காளியை ருசி பார்த்த யானை!

08:04 PM Jul 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் உணவு, தண்ணீரைத் தேடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானை விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஒங்கல்வாடி, அரேபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களைப் பீதியடையச் செய்து வருகிறது. ஊருக்குள் புகுந்து கட்டடங்களைச் சேதப்படுத்தியும், விளை நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தியும் வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே இருந்து வந்தனர். இந்நிலையில் ஆசனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தணிகாசலம் என்பவரின் மளிகைக் கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து உள்ளே வைத்திருந்த விலை மதிப்பிலான தக்காளியைத் தின்றுள்ளது. கடையில் பல பொருட்கள் இருந்தும் யானை தக்காளியை மட்டுமே தின்றுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. தற்போது தக்காளியின் விலை விண்ணைத் தொடும் அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வராதவாறு தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT