ADVERTISEMENT

ஓட்டுக் கேட்க எடப்பாடி செல்லும் சாலையும்.. ஓட்டு போடும் வாக்காளர் செல்லும் சாலையும்..      

09:02 AM Apr 04, 2019 | bagathsingh

ADVERTISEMENT

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று கூட்டணி அமைத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது இல்லாமல் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனறு தனிக்கட்சிகளும், பலர் சுயேட்சைகளாகவும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மக்களே எஜமானர்கள் என்று அவர்களை தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பெரிய கட்சி தலைவர்கள் செல்லும் இடங்களுக்கு தலைக்கு ரூ. 200 கொடுத்து கூட்டத்தை கூட்டி இந்தப் படை போதுமா.. என்று எதிர் அணிகளுக்கு கேட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் அதே ஆட்களை தான் அழைத்துச் செல்கிறார்கள் என்பது ஓட்டுப் போடும் அந்த மக்களுக்கு நல்லாவே தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் முன்பு ஜெ. முதல்வராக இருந்த போது அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள சாலைகளை கண்ணாடி போல சீரமைப்பதும், வேகத்தடைகளை உடைத்து தடையில்லா சாலைகளை ஏற்படுத்துவதும் அவர் நின்று பேசும் இடத்தைச் சுற்றி சாலை ஓரங்களில் கிடக்கும் மண்ணை கூட்டி அள்ளுவதும் வழக்கம். ஆனால் எதிர்கட்சிகள் வழக்கமான சாலைகளையே பயன்படுத்த வேண்டும்.


இப்படித் தான் தற்போதைய தேர்தலில் மாஜி முதல்வர் ஜெ. வை மிஞ்சும் அளவுக்கு தற்போதைய முதல்வர் எடப்பாடிக்காக நெடுஞ்சாலைத் துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி மட்டுமல்ல துணை முதல்வர் ஒ.பி.எஸ். செல்லும் சாலைகளும் அப்படித்தான்.


இவர்கள் ஓட்டுக் கேட்டு வருவதற்கு முதல் நாளில் அவர்கள் பயணிக்கும் சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களும் சீரமைக்கப்படுவதுடன் சாலை ஓரங்களை பொக்கலின் வைத்து சமன் செய்து கிராவல் கொட்டி மேடு பள்ளங்கள் நிரப்பப்படுவதுடன் வேகத்தடைகளும் அகற்றப்பட்டு வருகிறது. முதல்வர், துணை முதல்வர் கான்வாய்களில் செல்லும் போது குலுங்காமல் செல்ல தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் நெடுஞ்சாலைப் பணியாளர்கள். இதற்காக சுமார் ரூ. 100 கோடி வரை தமிழகம் முழுவதும் செலவிடப்படும் என்று ரகசியத்தையும் உடைக்கிறார்கள்.


ஓட்டுக் கேட்க வரும் இவர்கள் செல்லும் சாலை இப்படி பளபளக்கிறது என்றால் இவர்களை இந்த உயர்ந்த இடத்தில் அமர வைக்க ஓட்டுப் போட்ட மக்கள் எந்த மாதிரியான சாலையில் பயனிக்கிறார்கள் என்றால்.. அடிக்கடி விழுந்து செல்லும் மரண குழிகள் உள்ள சாலைகளில் தான் செல்கிறார்கள்.


ஓட்டுப் போட்ட.. இனியும் ஓட்டுப் போட காத்திருக்கும் வாக்காளர்கள் சொல்வது.. ஒவ்வொரு முறை ஓட்டுக் கேட்க வரும் போதும் அரசியல்வாதிகள் சொல்வது இந்த கிராம சாலைகளையும் சீரமைத்து கொடுப்போம் என்று சொல்லிவிட்டு போவார்கள். அடுத்த தேர்தலுக்கும் வருவார்கள். அதே சாலையில் நின்று மறுபடியும் வாக்குறுதி கொடுப்பார்கள். இது தான் வழக்கம். ஆனால் நாங்கள் ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர் ஆனவங்க போறதுக்கு மட்டும் எந்த திட்ட மதிப்பீடும் இல்லாம அவசரமா நிதி ஒதுக்கி ரோடு போடுவாங்க. ஆனா காலங்காலமா நாங்க போற சாலையை சீரமைத்துக் கொடுங்கன்னு போராட்டம் கூட நடத்தினாலும் நிதி இல்லன்னு சொல்வாங்க.


இப்ப எடப்பாடி சுற்றுப்பயணம் செய்ற சாலைகள் எப்படி சீரமைக்கிறாங்க. அவருக்கு ஓட்டுப் போட்டு முதல்வர் ஆக்கின நாங்க போற சாலை எப்படி இருக்கு பாருங்க. ஒரே தொகுதியில் எடப்பாடி செல்லாத ஊர்களுக்கு போகும் சாலைகள் இன்னும் அதே நிலை தான். அதனால தமிழ்நாட்ல இருக்கிற எல்லா சாலைகளிலும் முதல்வர் ஓட்டுக் கேட்க வந்தால் எங்க ஊரு சாலைகளும் சீராகுமே என்கின்றனர் ஆதங்கமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT