ADVERTISEMENT

“ஒரு காலத்தில் கல்வி நமக்கு எட்டாக்கனி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

02:35 PM Aug 09, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரைக்கும், தினந்தோறும் மிகச்சிறந்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். இருந்தாலும், இன்றைக்கு ஒரு ஸ்பெஸ்ஷல் டே. தமிழ்நாட்டினுடைய பள்ளிக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். கொண்டாட்டத்திற்குரிய நாளாக அமைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு தான் உங்களை எல்லாம் நான் சந்திப்பதற்கு வந்திருக்கிறேன். உங்கள் பெற்றோருக்கு இருக்கின்ற அதே அக்கறையுடனும், அன்புடனும் நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு குழந்தைகள் எல்லோரும் கல்வி கற்கவேண்டும், உயர் படிப்புகளுக்குப் போகவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், ஒரு காலத்தில் கல்வி நமக்கு இங்கே எட்டாக்கனி. கல்வி நமக்கு சுலபமாக கிடைக்கவில்லை. இன்றைக்கு நாம் எல்லோரும் படிக்கிறோம் என்றால், அதற்குப் பின்னால், நம்முடைய முன்னோர்கள் நடத்திய, ஏராளமான போராட்டங்கள்தான் காரணமாக இருக்கிறது. நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூக நீதியை வலியுறுத்தி வரும் சமூக சீர்திருத்தத் தலைவர்களால் தான் இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. இந்த மாற்றத்தை இன்னும் சிறப்பாக்க நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு பள்ளி, தனியார் பள்ளிகளும், அரசு கல்லூரி, தனியார் கல்லூரிகளும், நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால் தரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலோடுதான் இயங்கவேண்டும். இந்த நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவான நிறுவனங்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைத்தான் உருவாக்கி வருகிறோம். நாட்டினுடைய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் இதுவரைக்கும் நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைவான அளவில்தான் உயர்கல்விக்காகப் போயிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும். கல்வியிலேயும் இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய நிலைப்பாடு. அதிலும், உயர்கல்விக்குப் போகின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டதுதான், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி' திட்டம்.

தமிழ்நாட்டினுடைய எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கின்ற ஒரு அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவரால், ஏன் இதுவரைக்கும் ஐ.ஐ.டி., என்.எல்.யூ., நிஃப்ட் போன்ற நாட்டினுடைய முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குப் போக முடியாமல் இருந்தது என்றால், அதற்கு என்று தனியாக சமூகப் பொருளாதாரக் காரணங்கள் இருக்கிறது. நம்முடைய குழந்தைகளுக்கு நாட்டினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் எவை? அதில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன? இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதையை உருவாக்கி இருக்கோம். அதனால், இன்றைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு போகப்போறாங்க. பள்ளிக் கல்வித் துறையோட கடுமையான முயற்சிகளாலத் தான் இது சாத்தியமாச்சு” எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT