ADVERTISEMENT

'எஜமானுக்கு போட்டியாக பொய் பேசுகிறார் எடப்பாடி'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

08:11 PM Apr 05, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ''நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்கும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இது ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல். சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று கூறும் பாஜகவுடன் தற்போது பாமக கூட்டு சேர்ந்துள்ளது. பாஜக-பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்பது ராமதாஸுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். அதேநேரம் இந்தியா கூட்டணி அமைக்கும் அரசு சமூக நீதி அரசாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு ஒன்றிய ஏற்றுமதி ஊக்கத்தொகை 5% மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் காட்பாடி இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கப்படும். உளுந்தூர்பேட்டை தொகுதி நகர்ப்புற ரயில் நிலையத்தில் ஒரு ரயிலாவது நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்.

பொய்யின் முழு உருவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம். தனது எஜமானுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் பொய் சொல்லி வருகிறார். தான் கொடுத்த அழுத்தத்தால் ஆயிரம் ரூபாய் திமுக தருவதாக பொய் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த உதவித் தொகை கிராமப் பொருளாதாரம் வளர உதவி செய்கிறது. ஒரு அரசு இயந்திரம் எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த அதிமுக ஆட்சி. வன்னியர்கள் உள்ளிட்ட எம்பிசியினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT