ADVERTISEMENT

வெள்ள பாதிப்பு; “பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி

03:43 PM Jan 04, 2024 | mathi23

2024ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்றும் வெள்ள பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கடந்த அதிமுக அரசில், கொரோனா நோய்த் தொற்றின்போது தமிழக மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 2,500/- வழங்கப்பட்டது. மேலும் முழு செங்கரும்பும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2,500/- போதாது என்றும், 5,000/- ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்றும் ஊடகங்களில் பேட்டியளித்தார். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும், 2024-பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000 வழங்க வேண்டும். மேலும், மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5,000 வழங்க வேண்டும்.

இதனை தொடர்ந்து,எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும். மேலும், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT