ADVERTISEMENT

“இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும்”-ஸ்டாலின்

03:28 PM Apr 08, 2019 | Anonymous (not verified)



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. “விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியது செல்லாது” “சுற்றுப்புறச்சூழலை பாதிக்கிறது” என்று உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. ரூ 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் இந்தத் திட்டத்தால் சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வைத்திருந்த நிலங்களை எல்லாம் காவல்துறையை வைத்து பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக கதறியதைக் கூட கண்டுகொள்ளாமல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று காவல்துறையை வைத்து அராஜகம் செய்தார் பழனிசாமி. பத்தாயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் அடிக்கவே இத்திட்டத்தை நிறைவேற்ற துடித்தார்.

மக்களின் போராட்டங்களை அடக்கினார். விவசாயிகளை கொத்துக் கொத்தாக கைது செய்தார். “விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள்” என்று எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நான் முன்வைத்த கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. இத்திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு சேலம் 8 வழி பசுமைச் சாலை பற்றி பேசுவதையே தவிர்த்தார்.

எடப்பாடியும் - அன்புமணியும் கூட்டணி வைத்துக் கொண்டனர். ஆனால் ஐந்து மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் காப்பாற்றியிருக்கிறது. தீர்ப்பே கேட்டு பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாடியிருப்பதும், தங்களின் நிலங்களில் போட்ட கல்களை பிடுங்கி எறிந்திருப்பதும் இந்த தீர்ப்பு மக்களுக்கு தந்துள்ள மகிழ்ச்சியை காட்டுகிறது.

மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது.

விவசாயிகளை கொடுமைப்படுத்திய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். “இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும். சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக வழக்குப் போட்ட பா.ம.க இந்த வாக்குறுதியை அ.தி.மு.க அரசிடமிருந்து பெற வேண்டும். அப்படி வாக்குறுதி அளிக்கத் தவறினால் பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுமா?’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT