ADVERTISEMENT

ரம்ஜான் எதிரொலி: களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

07:55 AM Apr 30, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரம்ஜான் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறி, மசாலா பொருள்கள் விற்றாலும் ஆடு விற்பனைக்கு பிரசித்தி பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 29) அன்றும் வாரச்சந்தை கூடியது.

வரும் மே 3- ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை குறி வைத்து, கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆடுகளை வாங்க வியாபாரிகள், இறைச்சிக் கடைக்காரர்கள் குவிந்தனர்.

அதிகாலை 05.00 மணி முதலே சந்தை களைகட்டத் தொடங்கியது. 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ஒன்று 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. எடை மற்றும் வயதுக்கு ஏற்றபடி ஆட்டின் விலை குறைந்தபட்சம் 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது.

வெள்ளை ஆடு, பள்ளை ஆடு, கருப்பு ஆடு, தலைச்சேரி, செம்மறி ஆடுகள் என அனைத்து வகை ஆடுகளுக்கும் கடும் கிராக்கி நிலவியது. குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடுகளுக்கும் கூடுதல் விலை கிடைத்ததால் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT