ADVERTISEMENT

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் துரை வைகோ வைத்த கோரிக்கை!

04:21 PM Feb 05, 2024 | tarivazhagan

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்களுக்கு, சீர் மரபு பழங்குடியினர் என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், துரை வைகோ கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அந்த மனுவில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலக்காரர், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு உரிமைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு பழங்குடியினர்’ எனவும், மாநில அரசு உரிமைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு வகுப்பினர்’ எனவும் ‘இரட்டை சாதிச் சான்றிதழ்’ வழங்கும் அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையைப் போக்கிட, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, சீர் மரபு பழங்குடியினர் என ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, இச்சமூக மக்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, உடனடியாக அரசாணை வெளியிட்டு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. கழககுமார், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ். ஜெயசீலன் மற்றும் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT