
தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 6,652 வாக்குச்சாவடிகளில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஏற்கனவே, 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ அகிய இருவரும் தங்கள் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்குகளை செலுத்தினார்கள். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது, "என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. 56 ஆண்டுகால அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.
ஆயிரக்கணக்கான கி.மீ. நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள், 5 1/2 ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அதனால் அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. எனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது எனக்கு துளி அளவு கூட விருப்பமில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20ஆம் தேதி நடைபெறும் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவு செய்யும். அதில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதற்கு நான் முழு மனதுடன் கட்டுப்படுவேன். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தலிபான்கள் செயல்பாடுகளைப் போல் இங்கு செய்துள்ளனர். இதற்கு மன்னிப்பே கிடையாது, நீதிமன்றத்தைக் கூட அவர்கள் மதிக்கவில்லை” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)