ADVERTISEMENT

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அழிப்பு! -தந்தையிடம் நாமக்கல் போலீசார் விசாரணை!

12:15 AM Mar 11, 2020 | Anonymous (not verified)

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், செல்போன், லேப்டாப்பில் இருந்த முக்கிய ஆதாரங்களை காவல்துறையினர் அழித்து விட்டதாக அவருடைய தந்தை அளித்த புகாரின்பேரில், நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் அவரிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) நேரில் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. கடந்த 2015ம் ஆண்டு, அவருடைய முகாம் அலுவலகத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்த சிபிஐ காவல்துறையினர், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கடந்த ஓராண்டுக்கு முன்பு, கோவை நீதிமன்றத்தில் வழக்கை வைத்தனர்.



ஆனால் விஷ்ணுபிரியாவின் தந்தையான கடலூரைச் சேர்ந்த ரவிகுமார், கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு ஒரு புகார் மனு அனுப்பி இருந்தார். அந்த புகாரில், ''விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் காவல்துறையினர் அவருடைய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை மகளின் அறையில் இருந்து கைப்பற்றினர். ஆனால் அதில் இருந்த தகவல்கள் தற்போது அழிக்கப்பட்டு உள்ளன. ஆதாரங்களை அழித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக ரவிகுமாரை நாமக்கல் மாவட்ட காவல்துறையினர், எஸ்பி அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அழைத்து இருந்தனர். அவரிடம் ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார். அவரிடம் 27 வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்கான பதில்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT