ADVERTISEMENT

கால்நடைகளுக்கு தீவனமாகும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முருங்கைக்காய்கள்..!  

03:12 PM Aug 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தட்டார்மடம், போலையார்புரம், திசையன்விளை, முதலூர் போன்ற பகுதிகளிலுள்ள விவசாயிகளின் முக்கிய விவசாயமாக இருப்பது முருங்கைக்காய். முருங்கைக்காய்க்கு ஏற்ற மண் வளம் அந்தப் பகுதியிலிருப்பதால், அப்பகுதியினர் முருங்கைக்காய் சாகுபடியில் அதீத கவனம் செலுத்திவருகின்றனர். இந்தப் பகுதியில் முருங்கைக்காய் மொத்தமாகப் பயிர் செய்தாலும், சில விவசாயிகள் ஊடுபயிராகவும் பயிரிட்டுவருகின்றனர். இதன் அறுவடை சீசன் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடக்கும்.

இங்கு பயிராகும் முருங்கைக்காய்கள் தரமுள்ளவை என்பதால் கிராக்கியும் இருந்தது. இங்கு பறிக்கப்படும் முருங்கைக்காய்கள் முறையாக பேக்கிங் செய்யப்பட்டு கேரளா, சென்னை, மதுரை, மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் முக்கியத் தொழிலாக இருந்துவந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்யப்பட்டது. வருமானம் குறைவு என்றாலும் வேறு வழியின்றி விவசாயிகள் வழக்கம்போல் அனுப்பிவந்தனர். தவிர, இந்த ஆண்டு இந்தப் பகுதிகளில் முருங்கைக்காய்களின் காய்ப்பும் வரத்தும் அதிகமானதன் காரணமாக திடீரென்று விலையில் இறக்கம் ஏற்பட்டு கிலோ 5 ரூபாய்வரை வியாபாரிகள் கொள்முதல் செய்ய நேரிட்டதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மகசூலில் பறிப்புக் கூலி கூடக் கிடைக்காததால் மனம் நொந்துபோன அவர்கள், அதனைப் பறித்து ஆடு, மாடு, கால்நடைகளுக்குத் தீவனமாக கொண்டு போகின்றனர்.

இந்தப் பாதிப்பு தொடர்பாக முதலூரின் சேர்மக்கனி உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது, “கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் ஓரளவு இருந்ததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை கூட கொள்முதல் செய்தனர். அது சமயம் எங்களுக்குக் கணிசமான வருமானம் இருந்தது. ஆனால் தற்போது விளைச்சலும் வரத்தும் அதிகமிருப்பதால் வியாபாரிகள் கிலோ 5 ரூபாய்க்குக் கொள்முதல் செய்வதால் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. 55 கிலோ கொண்ட முருங்கைக்காய் பார்சலை எடுத்துச் செல்வதற்கு 75 ரூபாய் வரை செலவாகிறது. கட்டுபடி ஆகவில்லை. அதனால்தான் முருங்கைக்காய்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக கால்நடைகளுக்குத் தீவனமாகப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்’ என்கிறார்கள் கவலையுடன்.

திசையன்விளை பகுதியின் வியாபாரிகள் சிலரோ, “கேரள மார்க்கெட் எங்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், தற்போது அங்கே கரோனா தொற்று அதிகரித்ததால் கேரள பகுதிகளுக்கு அனுப்புவது மிகவும் குறைந்துவிட்டது. மேலும், விளைச்சல் அதிகமிருப்பதும் விலை குறைவிற்கு ஒரு காரணம். கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய், 7 மற்றும் 5 ரூபாய் வரைக் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் முருங்கைக்காய் விவசாயம் முக்கியத் தொழில் என்பதால் அது சம்பந்தமான தொழிற்சாலைகளை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதோடு நிரந்தமான வருமானத்திற்கும் வழி பிறக்கும்” என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT