ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையத்தின் மேல் கழுகுபோல வட்டமடித்து படம்பிடித்த ட்ரோன் கேமரா..!

11:19 AM Apr 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே ட்ரோன் கேமரா கழுகைப்போல வட்டமடித்துப் பறந்ததால் திமுகவினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனுவையும் அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பல இடங்களிலும் சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. அந்த வகையில் நாகையில் இன்று (20.04.2021) அதிகாலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே ட்ரோன் கேமரா வட்டமடித்தபடியே பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை அடுத்து தெத்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், இன்று அதிகாலை 20 நிமிடத்திற்கும் மேலாக வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே ட்ரோன் கேமரா ஒன்று கழுகுபோல பறந்து படம்பிடித்திருக்கிறது. அதுகுறித்து தகவலறிந்த திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் அங்கு குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார், அங்கு ட்ரோன் கேமராவைப் பறக்கவிட்ட சென்னையைச் சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய மூன்று பேரையும் பிடித்து நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் கழுகுபார்வையில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பதிவுசெய்த செல்ஃபோனையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மறுபுறம் வாக்கு எண்ணும் மையத்தினுள் ட்ரோன் கேமராவைப் பறக்கவிட அனுமதி அளித்த அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ட்ரோன் கேமரா பறக்கவிட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி திமுக மாவட்டச் செயலாளர் கௌதமன், கீழ்வேளூர் சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி ஆகியோர் நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவின் நாயரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்தக் கல்வி நிறுவனம் ஆளும் அதிமுகவிற்கு ஆதரவாகவே இருக்கும் என நாகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT