ADVERTISEMENT

'பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க காசு இல்லை பேனா சின்னம் தேவையா?' - கருத்துகேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

01:04 PM Jan 31, 2023 | kalaimohan

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாம் தமிழர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். சமூக ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டார். முதலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாக பேசிய சங்கர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி இந்த பேனா சின்னம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். ஆனால் சுற்றுச்சூழல் குறைபாட்டை முழுமையாக நிவர்த்தி செய்த பிறகுதான் அமைக்க வேண்டும் என அவரது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். அங்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்க் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருவதால் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேச ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய சீமான், ''கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிய அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப்பாருங்க ஒருநாள் நான் வந்து உடைக்கலைன்னா பாருங்க.. யார் கேட்டா பேனா சின்னம். ஏன் பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள்; நினைவிடம் கட்டி உள்ளீர்களே அங்கே வையுங்கள் கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க காசு இல்லை பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' என்று பேசினார்.

அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒரு தரப்பினர் சீமானை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். 'நீ போகச் சொன்னா நான் போய் விடுவேனா? என்று தெரிவித்த, சீமான் ''சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அதனால் கடலுக்குள் பேனா வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்களை செய்வோம். அதைத் தடுத்து நிறுத்தும் வரை போராடுவோம்'' என்று ஆவேசமாகப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT