ADVERTISEMENT

8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தம் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது: உயர்நீதிமன்றம்

07:36 PM Aug 21, 2018 | Anonymous (not verified)


நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை பசுமை வழிசாலை திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையே அமைக்கப்பட இருக்கும் 8 வழி பசுமை வழி சாலை திட்டத்திற்காக சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு தடை விதிக்க கோரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணியின் போது பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கு மன அழுத்ததில் உள்ள பொதுமக்களுக்கு அரசு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 18 கிராம சபை கூட்டத்தில் இத்திட்டம் வேண்டாம் என மக்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தரப்பிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற சாலை அமைக்கும் பணிகளுக்காக சாலையோரம் இருக்கின்ற மரங்கள் வெட்டப்படுகின்றன. பணிகள் முடிவடைந்ததும் நடப்படும் மரங்களை அரசு முறையாக பராமரிப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை பசுமை வழிசாலை திட்டத்திற்காக கையகப்படுத்தம் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT