ADVERTISEMENT

''மீண்டும் ஊரடங்கிற்கு நிர்பந்தித்து விடாதீர்கள்... ''-முதல்வர் மு.க.ஸ்டாலின்!

06:54 PM Aug 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 68 நாட்களுக்கு பிறகு நேற்று வரை மூன்றாவது நாளாக கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது. இரண்டாயிரத்தை நெருங்கும் அளவிற்கு கரோனா ஒருநாள் பாதிப்புபாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்'' என பேசியுள்ளார்.

''கூட்டம் கூடுவதால் கரோனா பரவ மக்களே காரணமாகி விடக்கூடாது. மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள். கரோனா என்ற பெரும் தொற்று கடந்த பதினெட்டு மாத காலமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு ஏற்படுத்தியுள்ள மருத்துவ கட்டமைப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், நம்முடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடைய தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றின் காரணமாக கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கரோனா என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோயாக இருப்பதால் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படும் நாடுகளில்கூட மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது.

கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மக்கள் தொகை அதிகமாகவும், நெரிசலாக உள்ள சூழல் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறோம். இதை கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT