ADVERTISEMENT

"மதியம் 12 முதல் 3 மணிவரை வெளியில் வர வேண்டாம்" -கடலூர் கலெக்டர் எச்சரிக்கை!

05:42 PM May 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த கத்திரிவெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறையவில்லை.

ADVERTISEMENT


இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

"வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் காலங்களில் லேசான ஆடைகள், உடலை இறுக்கிப் பிடிக்காத தளர்வான ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை, தொப்பி மற்றும் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். மேலும் வெளியில் செல்லும் போது தவறாமல் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.

வெளியிடங்களில் காரமான மற்றும் ரெடிமேட் வகை உணவுகளை தவிர்த்து இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்ற குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குளிர் பானங்களை கடைகளில் வாங்கி அருந்துவதை தவிர்த்து எலுமிச்சை சாறு, மோர், அரிசி வடிநீர் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் பழச்சாறுகளை வீட்டிலேயே தயாரித்து அவற்றை பருக வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்தை ஆவியாக்கும் மது, தேநீர் மற்றும் மென்பானங்கள் போன்றவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் நாள்பட்ட உணவு, அதிக புரதம் கொண்ட மாமிசம், கொழுப்பு சத்துள்ள கார வகை உணவுகள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகமான வெயிலால் மயக்கம் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுமாயின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பணிபுரியும் பெண்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். கால்நடைகளை நிழலான பகுதியில் கட்டி வைத்திருக்கவேண்டும். கால்நடைகளுக்கு அவ்வப்போது பருகுவதற்கு தாகம் தீர்க்க போதுமான அளவு தண்ணீரை வைக்க வேண்டும்.

சமையல் செய்யக்கூடிய இடத்தில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து வெளிக்காற்று சுலபமாக வீட்டுக்குள் வரும்படி செய்ய வேண்டும். அதேபோல் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்திருக்கலாம். அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமக்கள் அதிக வெப்பம் தாக்கக்கூடிய மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதையும் சமையல் செய்வதையும் தவிர்த்தல் நல்லது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT