ADVERTISEMENT

கெய்ல் எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியே கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்க கூடாது - ஈ.ஆர். ஈஸ்வரன்

02:41 PM Jun 11, 2018 | Anonymous (not verified)

கெய்ல் எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியே கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்க கூடாது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் கொங்கு மண்டலம் போராட்டக்களமாக மாறிவிடும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

விளைநிலங்கள் வழியாக கெய்ல் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதியை வழங்கி விடக்கூடாது. தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும் மூன்று ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படுமென்று கெய்ல் தென்மண்டல செயல் இயக்குனர் அறிவித்திருப்பது கொங்குமண்டல விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாயின் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிட்டு தமிழகத்தில் எரிவாயு குழாயை விவசாய விளைநிலங்கள் வழியாக பதிக்க ஆரம்பிக்கப்பட்டபோது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில ஆண்டுகாலமாகவே விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், எரிவாயு குழாயை விளைநிலங்களின் வழியே கொண்டு சென்றால் இந்த 7 மாவட்டங்களிலும் விவசாயம் அழிந்து போகும் நிலை உருவாகும். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று வார்த்தைகளால் மட்டும் சொல்லி கொண்டிருந்தால் போதாது. இந்த திட்டம் விளைநிலங்கள் வழியே செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் புதியபுதிய வளர்ச்சி திட்டங்கள் தேவை. ஆனால் அந்த வளர்ச்சி திட்டங்கள் விவசாயத்தை பாதிக்காதவாறு செயல்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததிகள் இங்கு வாழ முடியும். எந்தவொரு திட்டத்தையும் ஆரம்பத்தில் செயல்படுத்தும் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி நம்பிக்கை தரும் மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்காமல் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மட்டும்தான் நாங்கள் என்றும், செயல்படுத்தியது அவர்கள் தான் என்றும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுக்கொன்று மாறிமாறி குற்றச்சாட்டி கொள்வதை ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட விவகாரத்தில் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் நாளை நமக்கும் இதேநிலை உருவாகும் என்பதால்தான் ஆரம்பத்திலே எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல. எனவே தமிழக அரசு எரிவாயு குழாயை தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் பதிக்க மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல் மீண்டும் விளைநிலங்கள் வழியே கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயை பதிக்க முற்படுமானால் விவசாயிகளின் நலனுக்காக கொங்கு மண்டலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT