Skip to main content

விவசாயி பெயரில் ஆள்மாறாட்டம்; 38 லட்சம் ரூபாய் மோசடி; ஒருவர் கைது!      

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Arrested for 38 lakh rupees fraud by impersonating a farmer

 

சேலம் அருகே, விவசாயி பெயரில் ஆள்மாறாட்டம் செய்து தனியார் நிதி நிறுவனத்தில் 5 பேர் கும்பல் 38.12 லட்சம் ரூபாய் கடன் பெற்று  மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     

 

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி குப்பனூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (46). விவசாயி. இவர், சேலம் மாவட்டக்  குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “மேட்டூர் டிஎம்பி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். என்னுடைய உறவினரான இவர், கடந்த 2012ம் ஆண்டு, ஈமு கோழிப்பண்ணை வைக்க  ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். கோழிப்பண்ணை வைக்க அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி, எங்களுடைய அடையாள ஆவணங்களைக் கேட்டார். அதன்பேரில்  நானும், என் நண்பர்கள் முருகேசன், ஆறுமுகம் ஆகியோரும் சேர்ந்து எங்களுடைய ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது, பாஸ்போர்ட்  அளவுள்ள எங்களுடைய புகைப்படங்கள் ஆகியவற்றை அவரிடம் வழங்கினோம்.     பின்னர், ஈமு கோழிப்பண்ணை தொடங்குவதில் பிரச்சனைகள் இருப்பதாகவும், எங்களிடம் பெற்ற ஆவணங்களை பிறகு தருவதாகவும் கூறினார்.  இப்படியே 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் எங்களிடம் பெற்ற ஆவணங்களை அவர் திருப்பித் தரவில்லை.     

 

இந்நிலையில், சங்ககிரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் லாரி வாங்குவதற்காக எங்கள் நிறுவனத்திடம்  வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 38.12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினர். பணத்தை செலுத்தாவிட்டால் லாரியை பறிமுதல் செய்வோம் என்றும் கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் கடன் எதுவும் பெறவில்லை எனக்கூறினேன். பின்னர்தான்,  என்னுடைய ஆவணங்களைக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும் விஜயகுமாரும், அவருடைய கூட்டாளி சங்ககிரியைச் சேர்ந்த ராஜா, நிதி நிறுவன ஊழியர்கள் நாராயணன், ஜெயக்குமார், சுப்ரமணியன் ஆகியோர் பண மோசடி செய்திருப்பது தெரிய  வந்தது. அதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு வெங்கடாசலம் புகாரில் கூறியிருந்தார்.     

 

இந்த புகார் குறித்து குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வெங்கடாசலம் பெயரில் போலி ஆவணங்கள்  தயாரித்து நிதி நிறுவனத்தில் மோசடி செய்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதையடுத்து மேட்டூரைச் சேர்ந்த விஜயகுமார், சங்ககிரியைச் சேர்ந்த ராஜா, நாராயணன், ஜெயக்குமார், சுப்ரமணியன் ஆகிய 5 பேர் மீது  கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

 

விசாரணையில், நிதி நிறுவனத்தில் கடன் பெற்றது உள்ளிட்ட அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் ராஜாவின் வங்கிக் கணக்கு மூலமாகவே  நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ராஜாவை (68) குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜூன் 21ம் தேதி கைது செய்தனர். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள  விஜயகுமார் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்