ADVERTISEMENT

நீட் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ-யை அனுமதிக்கக் கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்

12:50 AM May 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நீட் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ-யை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

ADVERTISEMENT

’’நீட் தேர்வை நடத்தி வரும் மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் அதில் ஏராளமான குளறுபடிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாநிலங்களில் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை உருவாக்கி மாணவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீட் தேர்வை நடத்துகிற பொறுப்பை சிபிஎஸ்இக்குத் தரக்கூடாது. அதற்கு தமிழகஅரசு உரியச் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தும் போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிக எளிதான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால் எழுந்தப் புகார்களின் காரணமாக நாடு முழுவதும் ஒரே விதமான வினாத்தாள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நீட் தேர்வை நடத்துவதில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிற்நுட்ப நிறுவனம் ஒன்றை சிபிஎஸ்இ ஈடுபடுத்தியது. அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பலரை வெற்றிப்பெறச் செய்தனர் என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு நாடெங்கிலும் எழுந்தது. அதை மீறி மத்திய அரசு இந்த ஆண்டும் நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அந்த அமைப்பிடமே கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகத் தான் தமிழ்நாட்டு மாணவர்கள் கேரளாவிலும் ராஜஸ்தானிலும் தேர்வு எழுதக்கூடிய அநீதி நேர்ந்திருக்கிறது.

நீட் தேர்வே கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு. அந்த தேர்வு நடத்தப்படும் வரை அதை நடத்தும் பொறுப்பை சிபிஎஸ்இயிடம் கொடுக்கக்கூடாது. அதற்கு மாறாக மாநிலக் கல்வி வாரியங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்றிடம் வழங்க வேண்டும். அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழகஅரசு எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தற்போது பிற மாநிலங்களில் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே இதற்கு நிரந்தரமான தீர்வு. தமிழ்நாட்டில் இனிமேல் மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.’’


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT