Skip to main content

போன வருஷம் உடையைக் கிழித்தார்கள், இந்த வருஷம் உலையை வைக்கிறார்கள்! - நீட் அநீதிகள்!    

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

'நீட்' என்ற மருத்துவ நுழைவுக்கான தேர்வு தன் அதிகாரத்தை தமிழகத்தில் நீட்டிகொண்டே இருக்கிறது. இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு விதமாக எதிர்ப்புகள், விமர்சனங்கள், போராட்டங்கள், அனிதா என்ற நல்ல மதிப்பெண் பெற்ற மாணவியின் மரணம், என்று துயரங்கள் நீண்டுகொண்டேதான் இருக்கின்றன. இந்த வருடமும் அது நீடித்திருக்கிறது. கடந்த வருடமாவது எம்பிபிஎஸ் படிக்கப்போகும் மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த நுழைவுத் தேர்வு இருந்தது. இந்த வருடத்தில் இருந்து அது சித்தா, யுனானி என்று எல்லா மருத்துவ படிப்புகளுக்கும் கட்டாயமாக எழுதப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. வரும் மே 6ஆம் தேதியில் நடக்க இருக்கும் இந்தத் தேர்வுக்கு, லட்சம் மாணவர்கள் எழுத இருக்கும் நிலையில் வெறும் பத்தே பத்து நகரங்களில் மட்டும் நீட் தேர்வு மையம் அமைத்து நம்மையெல்லாம் முட்டாள்களாக்க உள்ளது, சிபிஎஸ்இ. 

neet atro

 

 

லட்சம்  பேருக்கு வெறும் பத்து நகரங்களில் மையம் என்றால் எந்த மூலைக்குப் பத்தும்? யோசித்துப் பாருங்கள். எண்ணிக்கைக்கு ஏற்றவாறுதானே மையங்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால், இவர்களோ மாற்று மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்திருக்கிறார்கள். ஏன் இங்கு மையங்கள் அமைக்க போதுமான வசதியில்லையா என்ன? அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் சிபிஎஸ்இக்கு ஏற்றவாறே கடைசியில் முடிக்கிறீர்கள். நீட் தேர்வு மைய அநீதி குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்" என்றது. இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு அவர்கள், "தற்போது கால நேரம் மிகவும் கம்மியாக இருப்பதனால் இந்த வருடம் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டவர்கள் அங்கேயே எழுதட்டும், அடுத்த வருடம் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது. 

 

neet atro2

 

தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? மருத்துவம் படிக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும், பிற மாநிலங்களுக்குச் சென்று தன் மையத்தைக் கண்டுபிடிப்பதிலிருந்து, பயணம், செலவு, புதிய இடம், மொழியால் ஏற்படும் மன உளைச்சல் என எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன? அனைவராலும் விமானப் பயணமா மேற்கொள்ள முடியும்? 'பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு இந்தியாவில் இருதய சிகிச்சை', 'உறுப்பு மாற்று சிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை' என்று சென்னையில் நிகழும் மருத்துவ சாதனைகளை எதிர்காலத்தில் பெருமை கொண்டாட விருப்பமில்லை போல.    
 

கடந்த வருடம் தமிழகத்தில் எந்த லட்சணத்தில் தேர்வு நடைபெற்றது என்று உலகம் அறிந்ததே. மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்லும் போது முழுக்கை சட்டை அணிந்திருந்தால் அனுமதியில்லை, பெண்கள் காதில் தோடு அணிந்திருந்தால் அனுமதியில்லை, மாணவர்கள் பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதை சோதிக்க என்னமோ வெடிகுண்டு வைத்திருக்கும் தீவிரவாதியை சோதிப்பதை போன்று அல்லவா சோதித்தார்கள்? தற்போது வெளிமாநிலங்களில் இவ்வாறு தேர்வுக்காகச் செல்லும் மாணவர்களுக்கு என்ன நேரிடுமோ? சரி இதையெல்லாம் விடுங்கள். தேர்வுக்காக நன்றாகப் படித்தும், அங்கு செல்ல பொருளாதார வசதியில்லாமல் இருந்தால் என்ன செய்வது?  இப்படி பல கேள்விகளை உள்ளடக்கிக்கொண்டு பல மாணவர்கள் தற்போது தமிழகத்தில் விரக்தியுடன் சுற்றுகிறார்கள்.

 

neet exam

 

இந்த 'நீட்' என்ற மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருந்திருந்தால் கூட இதை சகித்துக்கொள்ளலாம். ஆனால் இதுவோ அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான ஒன்றாக இருக்கிறது. நீட், அறிவை, திறமையை சோதிக்க சரியான அளவீடு இல்லையென்பதை பல கல்வி அறிஞர்கள் விளக்கிவிட்டார்கள். இந்நிலையில் எதற்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தமிழகம், ஒரு வேளை நீட் தேர்வுக்கும் தயாராகினாலும், மாணவர்கள் அதை நல்ல முறையில் எழுதவிடாமல் தடுக்க எல்லா வகையிலும் ஏற்பாடு செய்கிறார்கள், இந்த அரசும் அதிகாரிகளும். இவர்கள் கொடுக்கும் அசால்ட்டான, ஆணவமான பதில்கள்தான் நம்மை இன்னும் சோதிக்கின்றன.

 


கல்வியால், பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்ற கனவில் வரும் மாணவர்களுக்கு, பொருளாதாரம் இருந்தால்தான் கல்வியே பெற முடியும் என்று சொல்லிக்கொடுப்பது மிக மோசமான பாடம். ஒன்று நன்றாய் புரிகிறது, 'நீட்' தேர்வே வேண்டாமென்று போராடிய நம்மை நம் மாநிலத்திலேயே தேர்வை நடத்துங்கள் என்று போராட வைக்கிறார்கள். இப்படித்தான்  மக்களை  எல்லா விஷயங்களையும் மறக்கடிக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒன்றை மறக்கக் கூடாது, உங்களுக்கு அது யுக்தி, மாணவர்களுக்கு அது வாழ்க்கை. தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் ஒவ்வொரு துன்பத்தின் போதும் வருகிறது.  மக்களுக்கான அரசாக இல்லாத எந்த அரசும் ஒரு நாள் மக்களாலேயே அகற்றப்படும்.