ADVERTISEMENT

மக்கள் பணி செய்வதை தடுப்பதாகக் கூறி தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக்குழு பெண் தலைவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

11:05 AM Oct 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யம்மாள் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியபுவனா ஆகியோர், அப்பகுதி தி.மு.க நிர்வாகியான ஜோதிஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகளுடன் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனித்தனியாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை சந்தித்துப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT


அதில், ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவர் அய்யம்மாள் கொடுத்த புகார் மனுவில், நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண். மண்டவாடி, சிந்தலவடி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களால் ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் பதினெட்டு ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறேன்.


இந்த கரோனா காலத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் முழுவதும் கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிவருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன்பு ஊராட்சித் தலைவர்கள் சிலர், ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் எனது சமுதாயத்தின் பெயரைக் குறிப்பிட்டு என்னுடைய பேச்சைக் கேட்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

நான் மக்கள் பணி செய்வதை தடுக்கும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எனது அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்துவேன். என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.


அதேபோல் தொப்பம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியபுவனா கொடுத்த புகார் மனுவில், நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண் கோரிகடவு, மேல்கரைபட்டி கொழுமங் கொண்டான், கோவிலம்மாபட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களால் ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறேன். இந்த கரோனா காலத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்களை மக்களுக்கு வழங்கியும் வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில ஊராட்சித் தலைவர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.


அப்போது எனது சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு என்னுடைய பேச்சைக் கேட்கக் கூடாது என்றும் அவர்களின் பேச்சைக் கேட்காவிட்டால் அமைச்சரிடம் சொல்லி வேறு ஊருக்கு மாற்றிவிடுவதாகவும் மிரட்டினர். மக்கள் பணி செய்வதை தடுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்துவேன் என்று மனுவில் கோரியுள்ளார். இப்படி தி.மு.கவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு பெண் தலைவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தது ஒட்டன்சத்திரம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT