ADVERTISEMENT

“சொன்னா கேக்கமாட்டீங்க...” - தனி ஒருவராக அதிகாரிகளை அதிர வைத்த திமுக பிரமுகர்

04:46 PM May 11, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே வண்டல் மண் எடுக்கக் கோரியும் திமுக நீர்ப்பாசனச் சங்கத் தலைவர் தனி நபராக சாலையில் கட்டில் போட்டு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள சுமார் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளத்தில் சுமார் 20 முதல் 30 ஏக்கர் வரை ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பங்களிப்போடு குளத்தை சீரமைத்த கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரக்கோரி அப்போதைய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த நேரத்தில் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பிறகும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் கொத்தமங்கலம் பெரியகுளம் நீர்ப்பாசன சங்கத் தலைவர் (திமுக) முத்துத்துரை பெரியகுளம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கும் போது கொடுக்கப்பட்ட விதிமுறைகள், அளவுகளைக் கடந்து மண் திருட்டுகள் நடப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று காலை கொத்தமங்கலம் கிழக்கு பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே ஒரு கட்டிலைப் போட்டு (மழை மேகம் சூழ்ந்ததால் குடையுடன்) தனி ஆளாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்த வழியாக கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் காலை நேரத்தில் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தார். எனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் விரைவில் தீ குளிப்பு போராட்டம் செய்வேன் என்று அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு அரைமணி நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT