ADVERTISEMENT

அறிவிப்போடு நின்ற அதிமுக திட்டத்தை செயல்படுத்திய திமுக! 

06:18 PM May 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் வறட்சியாகவும் அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் தேவைகளுக்காக ஏராளமான பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், தற்போது தி.மு.க.வில் இருக்கும் அன்றைய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் பதவியில் இருந்தபோது அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் திட்ட அறிவிப்போடு நின்றது. அதனைத் தாண்டி எதுவும் நடக்கவில்லை. தி.மு.க.ஆட்சி அமைந்ததும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் வேகமாக நடந்தன.

பவானிசாகர் அணையிலிருந்து வரும் நீரானது கோபி அருகே உள்ள கொடிவேரி அனையிலிருந்து தண்ணீர் எடுத்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருந்துறை பகுதிக்கு கொண்டு வருவது தான் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம்.

ரூபாய் 224 கோடி செலவில் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் மூலம் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4.49 லட்சம் மக்களுக்கு தினமும் 16.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையிலான இத்திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அதையடுத்து 12ந் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, ஊராட்சி மன்ற தலைவர் நவமணி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 பில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கிணற்றில் இருந்து குடிநீரானது 29, 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான இயல்பு நீர் குழாய்கள் மூலம் திங்களூர் அருகே அமைக்கப்பட்டு உள்ள, 17.23 எம்.எல்.டி திறன் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தின் மூலம் 4.49 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 16.40 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீர் வழங்கப்படும்.


மக்களின் குடிநீருக்கே வறண்ட பூமியாக இருந்த பெருந்துறை பகுதி தி.மு.க.ஆட்சியில் தாகம் தீர்த்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT