ADVERTISEMENT

ஆட்சியமைக்க நாளை உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்!

03:58 PM May 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் (133 சட்டமன்றத் தொகுதிகள்) திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (04/05/2021) மாலை 06.00 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்.

அதன் தொடர்ச்சியாக, நாளை (05/05/2021) மாலை 06.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

அதைத் தொடர்ந்து, வரும் மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறும் விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைக்கிறார். மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு என்றும், ஒவ்வொரு அமைச்சருக்கும் 5 முதல் 8 பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT