ADVERTISEMENT

திமுக மற்றும் தோழமைக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நியாயமானது... எடப்பாடி பழனிசாமிக்குத் திருநாவுக்கரசர் கடிதம்

09:20 AM Apr 17, 2020 | rajavel

ADVERTISEMENT

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

அதில், காணொளி மூலம் தி.மு.க. தலைவரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீர்மானங்களையும் வரவேற்கிறேன். தங்களின் கனிவான பார்வைக்கும் நடடிவக்கைக்கும் கொண்டு வர விரும்புகிறேன்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த பட்சமாக ஏப்ரல் மாத இறுதி வரையிலான காலத்திற்குச் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான தீர்மானமாகும்.



தமிழக அரசின் கணக்குப்படி அரிசி வழங்கப்படும் குடும்ப அட்டைகள் 1,67,21,538, அண்ட்யோதயா அன்ன யோஜனா அட்டைகள் 18,62,615 ஆக மொத்தம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கப்படும் அட்டைகள் 1,85,84,153 அரிசி தவிர்த்து சர்க்கரை வழங்கப்படும் அட்டைகள் 10,76,552 காவலர் குடும்ப அட்டைகள் 61,061 எப்பொருளும் வழங்கப்படாத அட்டைகள் 60,827, ஆக மொத்தம் 1,97,82,593. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் 33,222 மூலமாக அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அட்டை வாங்க முடியாதவர்கள், அட்டை வாங்காதவர்கள், அட்டைக்கு மனுச் செய்தவர்கள் எனக் கணக்கெடுத்தாலும் ஒன்று இரண்டு லட்சம் பேரே கூடுதலாக இருக்கக் கூடும். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் தங்கிப் பணியாற்றி கொண்டிருப்பவர்கள் ஒன்று இரண்டு லட்சம் பேர் எனக் கணக்கிட்டாலும் மொத்தத்தில் சுமார் இரண்டு கோடி பேருக்கு நிதி வழங்க வேண்டியிருக்கும். ரூ.5000 வீதம் வழங்கிட கணக்கிட்டாலும் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவாகும். மாநில அரசு இதில், ஐந்தாயிரம் கோடி ரூபாயினை மத்திய அரசு தரவேண்டுமென கேட்டு வற்புறுத்திப் பெற வேண்டும்.



தமிழக அரசுக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி இப்போதைக்கு மக்களின் உயிரைக் காப்பதைக் காட்டிலும் மக்களைப் பசி பட்டினியில் இருந்தும், நோய்த் தாக்குதலில் இருந்தும் காப்பதைக் காட்டிலும் முக்கியப் பணி வேறொன்றுமில்லை. மத்திய, மாநில அரசுகள் ராணுவம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளில் இருந்து நிதியை எடுத்து தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவில் வீட்டிலேயே முடக்கிப்போட்டு, பசி, பட்டினி, பயம்,வேலையிழப்பு, உடல், மன பாதிப்பு என பல்வேறு சோதனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் காக்க போர்க்கால அடிப்படையில் கணக்கு பார்க்காமல் மக்களைக் காத்திட மத்திய – மாநில அரசுகள் உடன் முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இந்த கரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனைக் கூடங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது மருத்துவமனைகள் அனைத்திலும் தொற்று நோய் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை கூடங்கள் அமைத்து, தேவையான வெண்டிலேடர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் முகக் கவசங்கள், கை கழுவும் சோப்பு, சானிடைசர் ஆகியன ரேஷன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழ்வோரைக் கணக்கிட்டு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசிய, அவசரச் சூழல்களில் சொந்த ஊர் திரும்பி வர அனுமதி பெற்றுத் தரக் கோரும் வெளிநாட்டில் வாழ்வோருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பொது மக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக தனி தொலைபேசி எண்களையும், போதிய பணியாளர்களையும் நியமித்து தனி அலுவலகம் செயல்படுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட தமிழக அரசின் மூலமும், மத்திய அரசின் மூலமும் விரைந்து செயல்பட வேண்டுமென தமிழக முதல்வரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT