ADVERTISEMENT

கண்காணிப்பு கேமரா வைப்பதில் ஏற்பட்ட மோதல்; கொலையில் முடிந்த தகராறு

07:47 PM Mar 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முறையற்ற தொடர்பை கண்காணிக்க கேமரா பொருத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் வசித்து வரும் வேலுச்சாமி (வயது 51) மண்பாண்ட தொழில் செய்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் மற்றும் முறையற்ற தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலுச்சாமி தனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் இன்று ஈடுபட்டார். 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்த சாந்தி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடப்பதை பார்த்து வேலுச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த வேலுச்சாமி மண்வெட்டியால் சாந்தியை தாக்கியுள்ளார்.

இதைக் கண்ட சாந்தியின் மகனான வேடி மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரும் வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பறித்து அவரையும் அவரது தாயார் நாவம்மா மற்றும் மனைவி சுசிலா ஆகிய மூன்று பேரையும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயமடைந்த நாவம்மா, சுசீலா, சாந்தி ஆகிய மூன்று பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பி ஓடிய வேடி மற்றும் சந்தோஷ் இரண்டு பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT