ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

04:03 PM Jan 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகித்துவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்ட நிலையில், கட்சியின் சட்டத் திட்டத்தின்படி, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்துத்தான், பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை மாற்றவோ திருத்தவோ முடியாது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி, கட்சியை நடத்தி வருகின்றனர்.

புதிய பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடத்தக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உட்கட்சி தேர்தல் நடத்தும்வரை, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘2013ஆம் ஆண்டு வரை கட்சியின் உறுப்பினராக இருந்த அவர், அதன் பின்னர் உறுப்பினர் படிவத்தைப் புதுப்பிக்கவில்லை. தற்போது உட்கட்சி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர அவருக்குத் தார்மீக ரீதியில் எந்த உரிமையும் இல்லை’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (18.01.2021) வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT