ADVERTISEMENT

வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தைப் பாதுகாத்திட சென்னையில் கலந்துரையாடல்! 

06:45 PM May 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வன்கொடுமை தடுப்பு(திருத்த) சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும், அத்தீர்ப்பை திரும்பப் பெறுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் 28-5-2018 அன்று காலையில் சென்னையில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் பட்டியலின, பழங்குடி அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்திற்கு பி.சம்பத் (மத்தியக்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார். கே.சாமுவேல்ராஜ் (மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி) வரவேற்புரையாற்றினார். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூட்டத்தின் நோக்கங்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். இக்கூட்டத்தில் வன்னியரசு(விசிக), கு.ஜக்கையன் (ஆதி தமிழர் கட்சி), நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), மா.ப.வர்கீஸ்(மக்கள் புரட்சி கழகம்), ஏர்போர்ட் தா. மூர்த்தி(புரட்சி தமிழகம்), மு.மதிபறையனார்(அம்பேத்கர் மக்கள் படை), சைதை அன்புதாசன்(டாக்டர் அம்பேத்கர் பேரவை), இரா. சத்தியசீலன் (அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி), கோ.நீலமேகம்(புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை), மு.குணாளன்(தமிழ் மாநில குடியரசு கட்சி), எஸ். சசிகுமார்(அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி), ஏ.ஜி. பிரகாஷ் (அகில இந்திய ஆதி திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம்), எம். கவுதமன்(தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி), சேவாரத்னா சி.ராஜேந்திரன்(குடிசை வாழ் மக்கள் முன்னேற்றக்கழகம்), கே. சரவணன்(ஜெய் அம்பேத்கர் நலச்சங்கம்), பொ.இராஜேந்திரன்(அம்பேத்கர் மக்கள் சக்தி), யு.கே. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி) ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தியச் சமூகத்தில் சமூக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு கடுமையாக ஆளாகுபவர்களாக பட்டியலின, பழங்குடியின மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். தீண்டாமைக்கொடுமைகள், பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள் என பன்முகத்தாக்குதல்களை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கால ஓட்டத்தில் இத்தாக்குதல்களின் வடிவங்கள் மாறிக் கொண்டே வந்திருக்கின்றனவே தவிர ஒடுக்குமுறைக்கான இலக்குகளாக அவர்கள் தொடர்வது மாறவே இல்லை.

இத்தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும், இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் வென்றெடுத்தனவேயாகும். * 1955ல் தீண்டாமை ஒழிப்புச்சட்டம் * 1975ல் குடிமை உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் * 1989-ல் பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் * 2016ல் பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு (திருத்தச்) சட்டம் இத்தகைய வரலாற்றைக் கொண்ட இச்சட்டத்திற்குப் பெரும் பின்னடைவை 20-3-2018 அன்று டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் (எதிர்) மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கில் (5661/2017) உச்சநீதிமன்றத்தின் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு ஏற்டுத்தியுள்ளது. இத்தீர்ப்பு பட்டியலின, பழங்குடி மக்களின் அரசியல், சமூக, பொருளியல் உரிமைகளுக்கு விரோதமானது. 2015ல் வலுப்படுத்தப்பட்ட வன்கொடுமை தடுப்பு (திருத்தச்)சட்டம் இன்னும் முழுமையாக அமலுக்கு வராத நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இக்கூட்டம் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

* உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாகத் திரும்பப் பெறப்படுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, திருத்தச்சட்டம் அமலாவதை உறுதி செய்ய வேண்டும்.
* வன்கொடுமைத் தடுப்பு(திருத்த) சட்டத்தை அரசியலமைப்புச்சட்டத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.
* வன்கொடுமைகள் உரிய வகையில், உரிய வேகத்தில் தண்டனைக்கு ஆளாகிற வகையில் நாடு முழுமையும் சிறப்பு நீதிமன்றங்கள், சிறப்பு வழக்குரைஞர் நியமனங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட வேண்டும்.
கீழ்க்காணும் போராட்ட திட்டங்களை இக்கூட்டம் முடிவு செய்கிறது.

1. மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி ஜூலை 2-ஆம் நாள் தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த போராட்டம் நடத்துவது.

2. இப்போராட்டத்திற்கான ஆயத்தமாக 1. சென்னை, 2. நாகை, 3. மதுரை, 4. கோவை ஆகிய மையங்களில் போராட்ட சிறப்பு மாநாடுகளை நடத்துவது எனவும், இம்மாநாடுகளில் தலித், பழங்குடி அமைப்புகளையும் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

3. மேற்கண்ட பணியினை திட்டமிடவும், கிராமங்கள், நகரங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்திடவும், எல்லா மாவட்டங்களிலும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் தலித் பழங்குடி அமைப்புகள் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்களது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இம்முடிவுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்திட அனைத்து அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அனைத்துப்பகுதி மக்களும் ஆதரவளிக்கவும் வேண்டுகிறோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT